யாழ் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியை சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வு செய்ய வலியுறுத்தி செம்மணியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் யாழ் நகர நுழைவாயில் – நாவற்குழி பகுதியில் நடைபெற்றுள்ளது.
புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் வெளிப்படைதன்மையை உறுதிசெய்யுமாறு கோரி இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி “செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மக்கள்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.