தமிழர்களின் வன்னி மண்ணை மீள தூசி தட்டி எடுக்க வேண்டிய காலம்- ஊடகவியலாளர் நிலாந்தன்

தமிழர்களின் வன்னி மண்ணை மீள எடுக்க வேண்டிய காலம்

இந்த நேரத்தில் நாங்கள் தமிழர்களாக செயற்படக் கூடாது இலங்கையர்களாக செயற்பட வேண்டும் என சில தமிழ் தேசியக் கட்சிகளும் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

ஆனால் வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் மக்கள் காலம் காலமாக இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது தமிழர்களாகவே செயற்பட்டனர், யுத்தத்தில் உணவு, மருந்து பொருட்கள் இல்லாமல் நாம் அழிந்த போது எம்மை அனைவரும் தமிழர்களாகவே பார்த்தனர்.

நாம் அழிக்கப்பட்ட போது எம்மை தமிழர்களாகவே வேடிக்கை பார்த்தனர். அப்படி இருந்தும் தென்னிலங்கையில் வெள்ளப்பெருக்கு, சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது நாங்கள் வடகிழக்கு தமிழர்களாகவே நிவாரணங்களை கொழும்பிற்கு அனுப்பி வைத்தோம்.

அவர்கள் தமிழர்களை காலம் காலமாக கொன்று குவித்தாலும் தமிழர்களாகிய நாங்கள் இன்,மத, மொழி என்ற அடையாளங்களை கடந்து தமிழர்களாகிய நாங்கள் வருவோம், சிங்கள மக்களை காப்பாற்ற நாங்கள் வருவோம் என்பதுதான் உண்மை. ஏனெனில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலகின் மூத்த குடி மக்கள் நாம் அதனால் தமிழர்கள் வருவார்கள்.

பிரபாகரன் இருந்திருந்தால் இன்று எமக்கு உதவி செய்திருப்பார்’ என சிங்கள மக்கள் சிலர் கூறுகின்றனர். அதாவது தமிழர்கள் தனி தேசமாக இருந்திருந்தால் அவர்கள் உதவி செய்திருப்பார்கள் என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் எங்களில் சிலர் இதனை உணர மறுக்கின்றனர். உண்மையில் இன்று நாம் இலங்கைக்கு உதவ வேண்டுமாக இருந்தால் நாம் வடகிழக்கு தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும். தமிழர்கள் ஒரு தேசமாக ஒன்றிணைந்தால்தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ முடியும் என்பதை வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களும் உணர வேண்டும்.

வடக்கு கிழக்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்த தேசமாக செயற்பட்ட போதெல்லாம் பலவற்றை சாதித்திருக்கின்றனர், பொருளாதார தடை, வெள்ளப்பெருக்கு, சுனாமி, நோய் தொற்று, இராணுவ ஆக்கிரமிப்பு என அனைத்து தடைகளையும் தாண்டி தங்களது சுய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப் படுத்தி அதில் வெற்றியும் கண்டனர்.

எனவே தயவு செய்து இலங்கை அரசு வடகிழக்கு தமிழர்களை தேசமாக செயற்பட அனுமதிக்க வேண்டும். வன்னி நிலப்பரப்பில் யுத்த காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்  பொருளாதார கொள்கையை மீண்டும் நடைமுறைப் படுத்துவதற்கும் அது சார்ந்து தேர்ச்சி பெற்றவர்களை களம் இறக்க வேண்டும்.
முதலில் வடகிழக்கு பின்னர் அதனை தென்னிலங்கை போன்ற பகுதிகளுக்கு விரிவு படுத்த வேண்டும்.

வன்னியில் இருந்தவர்களுக்கு தெரியும் பொருளாதார நெருக்கடிக்குள் எப்படி வாழவேண்டும் என்று அந்த அனுபவங்கள் தற்போது நாட்டிற்கு தேவைப்படும்.
எனவே தமிழர் தேசத்தின் நிர்வாகத்தை தூசி தட்டி எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சிங்கள தேசம் செய்யாது ஆனால் வடகிழக்கு தமிழர்கள் மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் அதற்காக வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்த நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதற்காக புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை பெற முடியும்.
இதன் ஊடாக வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகள் ஓரளவு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும்.

வடகிழக்கு மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிங்கள மக்களுக்கும் உதவி செய்ய முடிம். வேறுமனே ஆட்சி மாற்றமோ, அல்லது தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதாலோ எதுவும் நடக்கப்போவதில்லை.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினையை நாடு நாடாக கடன் வாங்கியும் தீர்க்க முடியாது.

எனவே வடகிழக்கு தமிழர்கள் ஒரு தேசமாக செயற்பட வேண்டிய காலம் இது. நாங்கள் தமிழர்களாக செயற்படும் போதுதான் எமக்கான வளங்களை ஒன்று குவித்து செயற்பட முடியும். இன்று இந்தியாவில் தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததால்தான் அவர்கள் எமக்கான உதவிகளை செய்ய முன்வந்துள்ளனர். அதேபோல் வடகிழக்கு தமிழர்கள் பலமாகவும் எமக்கான பொருளாதார கொள்கையை உருவாக்கி செயற்பட்டால் தான் எம்மால் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு உதவி செய்ய முடியும்.

எனவே தமிழர்கள் இலங்கையராக இருந்தாலும் அவர்கள் ஈழத் தமிழர்களாக செயற்பட்டதே வரலாறு அவ்வாறு செயற்பட்டதனால்தான் அவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளும் ஒரு தனி நாட்டுக்கான நிர்வாகத்தை நிர்வகிக்க முடிந்தது.

எனவே வடகிழக்கு தமிழர்கள் எல்லோரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு என்ன செய்யலாம் என்று பாருங்கள். இப்பவும் கொழும்பிற்கு செல்லும் மைக்ரோ பஸ்கள் சில மண்ணெண்ணையில் ஓடுவதாக கேள்வி பட்டேன் அந்த கண்டுபிடிப்பு கூட தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார தடையால் உருவாகியதுதான் என்று கூறுகின்றனர். இவ்வாறான மாற்று உபாயங்கள் பல வடகிழக்கு தமிழர்களிடம் புதைந்து கிடக்கின்றன.

Tamil News