புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தயாரிப்பு தொடர்பான நிபுணர் குழுவின் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
நிபுணர் குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆர்.அரசகுலரத்ன இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டு நீதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியுடன் குறித்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.சட்டமூலத்தினூடாக கொண்டு வரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் மிக விரிவாக ஆராயும் வகையில் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர் குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் அமுலில் காணப்படும் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகளுக்கான சட்டத்தை இரத்து செய்து, புதிய சட்டத்தை இயற்றுவதற்காக குறித்த குழு செயற்பட்டு வருகிறது.
நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனிநபர்களின் மனித உரிமைகளை உறுதி செய்வதை நோக்காக கொண்டு புதிய சட்டமூலம் தயாரிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலைகளுக்கு இணங்கும் நோக்குடன் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் தயாரிக்கப்படுவதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.