டித்வா சூறாவளி தொடர்பான உரிய கால எச்சரிக்கைகளை வழங்குவதிலும், அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதிலும் தவறியதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி பல தரப்புக்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றன.
சூறாவளியின் தாக்கத்திற்கான தெளிவான அறிகுறிகள் இருந்தபோதிலும், பொறுப்புள்ள பல அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு உரிய எச்சரிக்கைகளை வழங்கவில்லை என இந்த தரப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
அரசாங்கத்தின் இந்தத் தவறே பல மாவட்டங்களில் ஏற்பட்ட உயிர்கள், உடைமைகள் மற்றும் சொத்துக்களின் பெரும் இழப்புக்கும், மக்கள் இடம்பெயர்வுகளுக்கும் நேரடியாகக் காரணம் என்றும் அவை வாதிடுகின்றன.
இந்த வழக்குகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அண்மைய பொருளாதார நெருக்கடி தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புகள் போன்ற முக்கியமான முன்னுதாரணங்களைக் குறிப்பிட்டு, எழுத்தாணை மனுக்களாக தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், தவிர்க்கக்கூடிய பேரழிவுகளைத் தடுப்பதற்கும் அரசாங்கத்துக்கு அரசியலமைப்பு கடமை உள்ளது என்பதை இந்த முன்னுதாரணங்கள் ஆதரிப்பதாக வழக்குத் தொடுக்கும் தரப்புகள் கூறுகின்றன.
இது தொடர்பாக, ‘சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின்’ அழைப்பாளர் சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண கூறுகையில், கடந்த நவம்பர் 12ஆம் திகதி முதல் சூறாவளி தாக்கம் வரையில் முறையான எச்சரிக்கை வழங்கத் தவறியதன் மூலம் ‘நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக’ அரசாங்கத்தை பொறுப்பாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தீர்வுகள் தோல்வியடைந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியை நாடவும் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். அதேவேளை, மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றத் தவறியமைக்காக அரசாங்கத்திற்கு எதிராக எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டத்தரணி ரவீந்திர தாபரே தெரிவித்தார்.
அத்துடன், டிட்வா சூறாவளி தொடர்பான அபாய எச்சரிக்கைகளை முறையாக வெளியிடாத வளிமண்டலவியல் திணைக்களத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக ‘அபி ஸ்ரீ லங்கா தேசிய அமைப்பின்’ அழைப்பாளர் பிரியந்த ஹேரத் கூறினார்.
சரியான நேரத்தில் தகவல் தொடர்பு இல்லாதமையே “உயிர்கள், சொத்துக்கள் மற்றும் விலங்குகளின் பாரிய இழப்புக்கு” வழிவகுத்தது என்றும், அரசாங்கமும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


