இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளாலும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரக் கருவூலமான வடக்குக் கடல் சூறையாடப்படுகிறது. இக்கடல் வளத்தை முறையாக பேணவேணுவது வடக்கு மீனவர்களின் நிலைபேறான கடற்றொழில் வாழ்வை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
போசணையிலும் வேலைவாய்ப்பிலும் உணவு பாதுகாப்பிலும் அந்நியச் செலாவணியிலும் அரச வருவாயிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றுகின்ற கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் தொடர்பான இன்றைய விவாதத்திலே வன்னி மாவட்டத்தில் இன்னமும் சீர் செய்யப்படவேண்டியுள்ள பகுதிகளை விவாதிக்க விரும்புகிறேன்.
கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் மொத்த தேசிய உற்பத்தியில் 1 சதவீத பங்களிப்பை கடற்றொழில் வழங்குகிறது. கடந்த ஆண்டின் தேசிய ஏற்றுமதி வருவாயில் 2.4மூ பங்களிப்பை வழங்கியுள்ளது. இலங்கை வாழ் மக்களின் விலங்கு புரத உட்கொள்ளலில் 50மூ இற்கும் அதிகமான பங்களிப்பை கடல்சார் உணவுகள் வழங்குகின்றன.
இது உலகளாவிய சராசரியிலும் மூன்று மடங்கு உயர்வாகும். ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த மீன்வளத்தை வாழ்வாதார மூலமாக நம்பியுள்ளனர். கடலோர மீன்பிடி, கடலோர மற்றும் ஆழ்கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு அனைத்தும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. இருப்பினும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையின் வலிமை சீரற்றது.
குறிப்பாக வடகடல் பகுதியில் மிகவும் சீரற்ற அணுகல் கடற்றொழில் பரப்பில் காணப்படுகிறது.
இலங்கையின் கடந்த ஆண்டின் மொத்த மீன் விளைச்சலின் 16 சதவீத பங்களிப்பை வடகடல் வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் வடகடலின் பங்களிப்பு அதன் வளநிலையுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது.உள்ளுரில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறைகள், எல்லைதாண்டிய இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய மீள்வளச்சுரண்டல் வடகடலின் மீன்விளைச்சலுக்கு சவாலாகும் முக்கிய காரணிகள் ஆகின்றன.
சட்டத்துக்குப் புறம்பான, ஒழுங்குபடுத்தப்படாத, அறிக்கைப்படுத்தப்படாத மீன்பிடியால் (ஐயுயு) வருடாந்தம் உலகளாவிய வகையில் 26-50 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார இழப்பு ஏற்படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் 2020ஆம் ஆண்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



