பொறுப்பு கூறும் விவகாரம்: பிரேரணைகளினால் பயனில்லை- பி.மாணிக்கவாசகம்

ஐநா மன்றத்தின் மனித உரிமைகளுக்கான பேரவையின் செப்டம்பர் மா அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையில் இலங்கையில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.

இலங்கை தொடர்பாக இந்த அமர்வில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது, ஆனால் அது குறித்து இலங்கை அரசு அலட்டிக்கொள்ளவில்லை என்றே தெரிகின்றது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஏற்கனவே பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைகளுக்கமைய உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறும் நடவடிக்கைகளில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்ற அதிருப்தி நிலவுகின்றது. அத்தகைய நிலைமைகளிலும்கூட இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்துச் செயற்படத் தவறியிருக்கின்றது. அல்லது வேண்டுமென்றே இனவாத அரசியல் நோக்கங்களுக்காக உரிமை மீறல் செயற்பாடுகளை அனுமதித்திருக்கின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் இந்தப் போக்கு, அதிகாரத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கின்ற வழமையான முரண்பாடான நிலைமையின் வழியிலேயே அமைந்திருக்கின்றது. அது ஒன்றும் இலங்கை அரசியலில்; புதிய விடயமல்ல. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நீதி, நியாயம், ஜனநாயகம், மனித உரிமை மீறல்கள் குறித்து வாய் கிழிய பேசுகின்ற – செயற்படுகின்ற பேரின அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ பதவி ஏற்றவுடன் நேர்மாறான வழிகளிலேயே செயற்படுவார்கள். இது இலங்கை அரசியலில் எஸ்.டபிள்யூ.ஆர் பண்டாரநாயக்கா காலம் தொடக்கம் மகிந்த ராஜபக்ஷவின் வழியில் வந்து இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் உறுதியாகத் தொடர்கின்றது.

பண்டாரநாயக்கா பிரதமராவதற்கு சிறுபான்மை இன மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை ஏற்றுச் செயற்பட்டிருந்தார். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்துச் செயற்பட்டிருந்தார். ஆனால் பிரதமர் பதவிக்கு வந்தவுடன் சிறுபான்iமை இன மக்களின் அரசியல் உரிமைகளுக்கும் அவர்களின் மொழியுரிமை வழியிலான அரசியல் இருப்புக்கும் விரோதமாக சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி, நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்திருந்தார்.

முன்னர் மகிற்த ராஜபக்சவும் எதிரணி அரசியல்வாதியாக இருந்தபோது நாட்டில் நிலவிய மனித உரிமை மீறல்களுக்காக ஐநா வரை சென்று போராட்டம் நடத்தியிருந்தார். ஆனால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், அரசியல் உரிமைகளுக்கும், ஜனநாயக இருப்புக்கும் நேர்மாறான கொள்கைகளைக் கொண்டவராக கோலோச்சினார்.

நாட்டின் பரம்பரைக் குடிமக்களாகிய தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைக்கான போராட்டத்தை ஈவிரக்கமின்றி பயங்கரவாதமாகச் சித்தரித்து உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று மோசமான முறையில் ராஜபக்ச முறியடித்தார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னரும்கூட அசர் ஓய்ந்திருக்கவில்லை. யுத்தமோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களை சமூக, அரசியல் நிலைமைகளில் இராணுவமயப்படுத்தி தமிழ் மக்களை ஓர் இடும்புப் பிடியிலேயே வைத்திருந்தார். போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பிரதேசங்களை புனர்வாழ்வுச் செயற்பாடுகள் என்ற பெயரில் அவருடைய தலைமையில் அரசு மேற்கொண்ட அபிவிருத்திச் செயற்திட்டங்கள் யாவும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான நிலைத்து நிற்கத்தக்கதான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த போதிலும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணவில்லை. அதில் நாட்டம் கொள்ளவுமில்லை.

தொடர்ச்சியான இராணுவப் பிடிக்குள் தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக வைத்து, இனவாத அச்சுறுத்தல் அரசியல் நடவடிக்கைகளையே அவருடைய அரசாங்கம் முன்னெடுத்திரந்தது. அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அவரது சகோதரர் கோத்தாய ராஜபக்ச சிங்கள பௌத்த மக்களின் தனித்துவமான 69 வாக்குகளின் மூலம் சிங்கள பௌத்த தனிகாட்டு ராஜாவாகத் தெரிவு செய்யப்பட்டார்.

தேர்தலில் வென்று ஜனாதிபதியாகிய பின்னரும் அவர் நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனாதிபதி என்ற உண்மையான அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்கள பௌத்த மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய தனக்கு அந்த மக்களின் நலன்களே முக்கியம். அவர்களின் அபிலாசைகளையே நிறைவேற்றுவேன் என்று அவர் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.

அவரது மோசமான பொருளாதாரக் கொள்கைகளினால் அன்றாட உணவுக்கும் எரிபொருள் மருந்துப் பொருட்களுக்கும் அல்லாடிய மக்கள் திரண்டெழுந்து நடத்திய போராட்டத்தையடுத்து தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற நிலையில் நாட்டைவிட்டுத் தப்பியோடி மின்னஞ்சல் வழியாகத் தனது பதவியை இராஜிநாமா செய்திருந்தார். அதனையடுத்து வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்கு பிரதமர் பதவி வழியாக அதிர்ஸ்டவசமாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவும் இந்தப் பதவிக்கு வருவதற்கு முன்னர் ஜனநாயகம் மனித உரிமைகள் விடயங்களில் ஆதரவான போக்கையே கொண்டிருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் தெரிவாகி ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி நிறைவேறச் செய்திருந்தார். ஆனால் இப்போது, இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கையின் இறைமையை மீறுகின்ற செயற்பாடு எனக் குறிப்பிட்டு அவற்றை நிராகரிப்பதாக அவரது அரசாங்கம் கூறுpயிருக்கின்றது.

முன்னைய மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கமைய சர்வதேச மற்றும் உள்ளர் கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கு நல்லாட்சி அரசாங்கம் பச்சைக் கொடியசைத்து இணக்கம் தெரிவித்திருந்தது, ஆனால் இப்போது அந்தத் தீர்மானங்கள் நாட்டின் இறைமையை மீறும் வகையில் அமைந்திருப்பதாக அரச தரப்பினர் தமது நிராகரிப்புக்கு நியாயம் கற்பித்திருக்கின்றனர்.

மனித உரிமைகளை மீறுவது ஒரு குற்றச் செயலாகும். அதுவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதே மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் மனித உரிமைகளையும் மீறுவது ஏற்புடையதல்ல. மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற அரசாங்கமும் நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் மக்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மக்களுக்குக் கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டும். இதனாற்தான் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அரச பணியாளர்களுக்கும் மக்களே எஜமானர்கள் என குறிப்பிடப்படுகின்றார்கள். மக்கள் தமது பிரதிநிதிகளையும் அரசாங்கத்தையும் தங்களது தேவைக்காகவும் தங்களுக்கு சேவை புரிவதற்குமாகவே தெரிவு செய்து அனுப்புகின்றார்கள். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால் இந்தப் பண்புகள் இலங்கை ஆட்சியாளர்களிடமும், அரசியல்வாதிகளிடமும் மருந்துக்கும் கிடையாது என்றே கூற வேண்டியுள்ளது. ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரத்துக்கு வந்ததும் தாங்களே பெரியவர்கள் தங்களைவிட வேறு எவரும் இல்லை என்ற ரீதியில் சுய அரசியல் இலாபத்துடன் செயற்படுகின்றார்கள். இதுவே காலம் காலமாக நாட்டில் நடந்து வருகின்றது. அந்த வகையிலேயே அடிப்படை உரிமை மீறல்கள், அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள போதிலும், உரிமை மீறல்கள் எதுவும் இடம்பெறாததைப் போன்று வெளி உலகததிற்கு ஆட்சியாளர்கள் ‘படம்’ காட்டுகின்றனர்.

குறிப்பாக நாட்டின் தேசிய சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி புரிவதிலேயே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றார்கள். அவர்களுடைய அரசியல் உரிமைகள் நீண்டகாலமாகவே மதிக்கப்படுவதில்லை. அவர்களுக்குரிய உரித்தக்களை அனுமதிப்பதும் இல்லை. இந்த வகையிலேயே ஆயுத முரண்பாட்டுக்கால உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டையும் கடத்தி, இழுத்தடிப்பு செய்து வருகின்றார்கள்.

முனித உரிமைகள் பேரவையும் சர்வதேசமும் உரிமை மீறல்களுக்கும் ஜனநாயக வழிமுறைகளை மீறிநடப்பதற்கும் எதிராகக் குரல் கொடுத்த போதிலும், அது குறித்து அலட்டிக் கொள்ளாத போக்கிலேயே ஆட்சியாளர்கள் நடந்து கொள்கின்றார்கள். ஜனநாயக விழுமியங்களும் மனித உரிமைகளும் முறையாகப் பேணப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்ற போதிலும், உரிமை மீறல் விடயங்களில் அரசாங்கம் முறையாக நடந்து கொள்ளாதபோது ஆடை ஏற்றுமதித்துறையில் வழங்கப்பட்ட வரிச்சலுகையை அந்த ஒன்றியம் இடைநிறுத்திய அனுபவத்தைக் கொண்டுள்ள போதிலும், ஆட்சியாளர்கள் திருந்தியதாகத் தெரியவில்லை.

உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறும் கடப்பாட்டைப் புறக்கணித்துள்ள அரசாங்கத்தின் போக்கிற்கு சர்வதேசம் அதிருப்தி கொண்டுள்ள சூழலிலும் அரசியல் தீர்;வை வலியுறுத்தி வடக்கு கிழக்குப் பிரதேசம் எங்கும் மேற்கொள்ளப்படுகின்ற 100 நாள் போராட்ட நிகழ்வில் கலந்து கொணடிருந்தவர்களை அரசாங்கம் அச்சுறுத்தி வருகின்றது.

இரண்டு மாகாணங்களிலும் மூலை முடுக்குகள் எங்கும் மாறி மாறி இடம்பெற்று வருகின்ற இந்தப் போராட்டத்தில் பங்குகொள்கின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் மனித உரிமைக காப்பாளர்களுமாகிய பெண்கள் துரத்தித் துரத்தி கண்காணிக்கப்படுகினற்hர்கள். பின்தொடரப்படுகின்றார்கள். போதாக்குறைக்கு அந்தப் பெண்கள் வீடுகளில் இல்லாத நேரங்களில் அவர்களது வீடுகளுக்குச் செல்கின்ற புலனாய்வாளர்களும் பொலிஸ் மற்றும் படைத்தரப்பினரும், பெற்றோர் சகோதரர்கள் அடங்கிய குடும்பத்தினரை, அச்சுறுத்தி அவர்களை அச்சடையச் செய்வதன்மூலம் அந்தச் செயற்பாட்டாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ள வடக்கு கிழக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிக்கையொன்றின் மூலம் அரசாங்கத்திற்கும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கும் நேரடியாகவே முறையிட்டிருக்கின்றார்கள்.

இந்த அச்சுறுத்தல் செயற்பாடுகள் மட்டுமல்லாமல் சில செயற்பாட்டாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என்பன இரவு வேளையில் களவாக சோதனையிடப்பட்டு சான்றுகளாகப் பொருட்கள் கவர்ந்து செல்லப்பட்டிருப்பதாகவும் அந்த இணைப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இத்தகைய மனித உரிமை நிலைமைகளில் ஐநா மனித உரிமைப் பேரவையும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கை அரசாங்கத்தின் மீது வெறுமனே பிரேரணைகள் வழியாக பொறுப்பு கூற வேண்டும், மனித உரிமைகளை முறையாகப் பேண வேண்டும் என வலியுறுத்துவதில் எந்தவித பயனும் விளையப் போவதில்லை. யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த காலம் தொட்டு கடந்த 13 வருடங்களாக பொறுப்பு கூறும் விடயத்தில் இதனை அனுபவ ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களும் ஐநா மனித உரிமைப் பேரவையும் உறுப்பு நாடுகளும்கூட உணர்ந்திருப்பதை மறந்துவிட முடியாது.

எனவே, அரசாங்கத்திற்குப் புரியம் வகையில், அதனைச் சரியாகச் செயற்படத்தக்க முறையிலான நடவடிக்கைகளில் ஐநா மன்றமும், ஐநா மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஈடுபட வேண்டும். அத்தகைய செயற்பாடு மேற்கொள்ளப்படாத பட்சத்தில் ஐனா மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான அமர்வுகள் வெறும் கூச்கலுடன் முடிகின்ற ஒரு கைங்கரியமாகவே தொடரும் என்பதில் சந்தேகமில்லை.