ஜெனின் நகர மக்களுக்கு எதிராக இஸ்ரேல் பகிரங்க யுத்தம்-பலஸ்தீனம் குற்றச்சாட்டு

மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலியப் படையினர் நேற்று நடத்திய பாரிய முற்றுகையில் 9 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

நூற்றுக்கணக்கான துருப்புகள் இம்முற்றுகையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், வான்வழித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

கடந்த பல வருடங்களில் இஸ்ரேலிப் படையினர் நடத்திய மிகப் பெரிய முற்றுகை இதுவாகும். கவச வாகன்கள், இராணுவ புல்டோசர்கள், ஆளில்லா விமானங்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன.

‘விரிவான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை முயற்சி’ இது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல்  ஜெனின் நகர மக்களுக்கு எதிரான பகிரங்க யுத்தம் என பலஸ்தீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.