நாடளாவிய ரீதியாக இன்று (09) பாரிய மின்தடை ஏற்பட்டது. பாணந்துறை க்றிட் உப மின்நிலையத்தில் உள்ள மின்கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மின்தடை நேற்று (09) மாலை 5 மணியளவில் வழமைக்கு கொண்டு வரப்பட்டது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை காரணமாக பல சேவைகள் பாதிப்படைந்தன.
குறிப்பாக வீதிகளில் காணப்படும் சமிக்ஞை மின் விளக்குகள் செயலிழந்தன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அத்துடன் ரயில் மார்க்கத்தில் உள்ள சமிக்ஞை மின் விளக்குகளும் செயலிழந்தன.
இதனால் பல ரயில் சேவைகள் தாமதமடைந்தன. இதனையடுத்து ரயில் கடவைகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு ரயில்வே திணைக்களம் கோரிக்கை விடுத்தது.
அதேநேரம் சில இடங்களுக்கு நீர் விநியோக தடை ஏற்பட்டதுடன் சில இடங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெற்றதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.
இதேவேளை, மின் பிறப்பாக்கியில் இருந்து வெளியான புகையினால் பாதிப்புக்குள்ளான நால்வர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று (09) ஏற்பட்ட மின்சார விநியோகத்தடையை அடுத்து, பொகவந்தலாவை நகரில் உள்ள விற்பனை நிலையமொன்றில் மின்சாரத்தை பெறுவதற்காக மின் பிறப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த மின் பிறப்பாக்கியில் இருந்து வெளியான புகையினை சுவாசித்ததன் காரணமாக அந்த விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் நால்வர் சுகவீனமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.



