பல கொலைகளுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது- உதவிய இரு தமிழர்களும் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகக் குழுவொன்றின் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி உள்ளிட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த யாழ்ப்பாணத்தை ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை இடம்பெற்ற வேளையில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக தேடப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை இலங்கை பொலிஸின் சிறப்பு குழு நேபாளத்தில் கைது செய்துள்ளது. இந்த சிறப்பு நடவடிக்கையின் போது முக்கிய சந்தேகநபரும் மேலும் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணை மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பல நீண்ட இரகசிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறை, சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் வெளிநாடுகளின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, நேபாள அரசாங்கத்தின் ஆதரவுடன், களத்தில் கிடைத்த தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை தகவல்களைப் பயன்படுத்தி இலங்கை பொலிஸ் குழு சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்தது.

சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் பல்வேறு கொலைகளைத் திட்டமிட்ட ஒருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பில் அண்மையில் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
நேபாளத்தில், இஷாரா செவ்வந்தியுடன் மற்றொரு தமிழ் ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இரண்டு பெண் சந்தேகநபர்கள் மற்றும் நான்கு ஆண் சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆகும்.

இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றையப் பெண் இஷாரா செவ்வந்தியை ஒத்த தோற்ற முடையவராக இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தன்னைப் போல் தோற்றமுடைய பெண்ணை பயன்படுத்தி இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர் இஷாரா செவ்வந்தி நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மித்தெனிய, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்திருந்த அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த நபர் உதவிகள் அனைத்தையும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மூன்று வாரங்கள் தங்கியிருந்த இஷாரா செவ்வந்தி அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.