தொல்பொருள் அடையாளம், வரலாறு கொண்ட இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படலாம் என்றால் ஏன் சட்டவிரோதமாக, அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை இடிக்கப்படக்கூடாது? பௌத்த பிக்குகள் கன்னத்தில் அறையும் போது அமைதியாக வாங்கிக்கொள்ளும் பொலிஸாருக்கு இந்து குருமார் என்றால் இளக்காரமா என கேட்கிறோம் என தமிழரசுக்கட்சி உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் பல ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தை மையப்படுத்தி காணாமலாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் உள்ளனர். பலர் இந்த மண்ணில் இல்லை. நிமலராஜன், தராக்கி சிவராம் போன்றோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கொலை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படவில்லை. இதுபோன்று ரவிராஜ், திருகோணமலை மாணவர்களின் கொலைகள் தொடர்பிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை.
இதேவேளை இராணுவத் தளபதியாக சவேந்திரசில்வா இருந்த காலத்தில் யாழ். தையிட்டி கிராமத்தில் திஸ்ஸ விகாரை என்ற அடிப்படையில் தனியார் காணியில் விகாரை கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த விகாரை அவ்விடத்தில் இருக்கக்கூடாது என்றும், தமது காணிகளை வழங்குமாறும் காணி உரிமையாளர்களும் மக்களும் தொடர்ந்தும் போராட்டம் நடத்துகின்றனர். அந்த வகையில் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி போராட்டம் நடத்தப்பட்டது. ஜனநாயக வழியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பொலிஸாரின் கெடுபிடிகள் மற்றும் அராஜகத்தை அவதானிக்க முடிந்தது.
அங்கு வேலன்சுவாமியும் கலந்துகொண்டிருந்தார். இவரை மிக மோசமாக இழுத்து வாகனத்தில் பொலிஸார் ஏற்றினர். இதுவே பௌத்த பிக்குவாக இருந்தால் பொலிஸார் கைகட்டி நிற்கின்றனர். பௌத்த பிக்குகள் பொலிஸாரை கன்னத்தில் அறைகின்றனர். அவர்கள் தூஷணத்தினாலும் பேசுகின்றனர். ஆனால் இந்துமத குருவாக இருந்தால் கேட்பாரில்லை என்பது போன்றுதான் பொலிஸார் செயற்படுகின்றனர்.வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த காலத்தில் பொலிஸார் அராஜகம் செய்ததாக நீங்கள் கூறுகின்றீர்கள். கடந்த காலங்களில் நடந்த விடயங்களையும் சமர்ப்பிக்கின்றீர்கள். ஆனால் உங்களுடைய காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக அவசரகால சட்டத்தில் மிக மோசமான நடவடிக்கைளை இந்த அரசாங்கத்தின் பொலிஸார் ஆவேசத்துடன் செய்தனர். என்னுடனும் மிக மோசமாக அவர்கள் நடந்துகொண்டனர். கடந்த 3ஆம் திகதி அங்கு புதிய புத்தர் சிலையை முன்வைக்க முயன்றபோது அதனை மக்கள் தடுத்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை விடவும் அதிகமாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸ் அராஜகம் அங்கு விதைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளது. வேலன் சுவாமியும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். எனக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீங்கள் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தப் போகின்றீர்களா? நீதி வழங்கப் போகின்றீர்களா? அல்லது தொடர்ந்து பொலிஸ் அராஜகத்தை கடைப்பிடிக்கப் போகின்றீர்களா?
குறிப்பாக 2010ஆம் ஆண்டு வரையில் வலிகாமம் வடக்கில் மயிலிட்டி, தோலகட்டி, தையிட்டி, பலாலி, வசாவிளாலான் போன்ற பகுதிகளில் இருந்த இந்து ஆலயங்கள் அடியோடு இடித்தழிக்கப்பட்டுள்ளன. . அந்த ஆலயங்களின் அடையாளங்கள் இல்லை. மயிலிட்டியில் உள்ள புனித காணிக்கை மாதா ஆலயம் 2010 வரையில் முழுமையாக இருந்தது. அது 150 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த ஆலயம். இந்த ஆலயத்தை அடியோடு இடித்தழித்துள்ளனர் . இவ்வாறு தொல்பொருள் அடையாளம், வரலாறு கொண்ட இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படலாம் என்றால் ஏன் வலுக்கட்டாயமாக அமைக்கப்பட்ட புத்த விகாரையை இடிக்கப்படக்கூடாது?
நீங்கள் இந்து ஆலயங்களை அடியோடு பிடுங்கலாம், கத்தோலிக்க ஆலயங்களை அழிக்கலாம் என்றால் எவ்வாறு இந்த நாட்டில் அனைத்து இனங்களையும் மதங்களையும்உங்களினால் நேசிக்க முடியும்? . முதலில் சிங்கள மக்களிடம் உள்ளதை கூறுங்கள். மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஆட்சியை செய்யுங்கள். உங்களின் அடக்குமுறை என்பது இப்போதும் வடக்கில் இருக்கின்றது. அங்கு வித்தியாசமான ஆட்சியை நீக்குங்கள். நீதியான, நேர்மையான தீர்வை வழங்க முன்வாருங்கள். அப்படி செய்தால் இந்த நாட்டின் நல்ல அரசியல் தலைவர்களாக நீங்கள் அடையாளப்படுத்தப்படுவீர்கள் என்றார்.



