வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘சேவை தேவை கருதிய’ ஆசிரியர் இடமாற்றங்களில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வி அதிகாரிகள், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி தன்னிச்சையாகச் செயல்படுவதாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு இடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாக சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இன்னும் 9 வேலை நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை வரவுள்ளது.
எனவே, இந்தக் குறுகிய காலத்திற்குள் ஆசிரியர்களின் மேன்முறையீடுகளை முறையாகப் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே மேன்முறையீடுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் இத்தகைய தவறான நடைமுறைகளைக் கட்டுப்படுத்தி, ஆசிரியர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் இந்தக் கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



