அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் இனி ஈரானில் தாக்குவதற்கு ஏதுமில்லை என்பதால் தான் எந்நேரமும் தனது விருப்புப்படி தான் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று ஆணவமாகப் பேசினார். உடனேயே ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவது எங்கள் முடிவிலேயே உள்ளது எனப் பதிலளித்தது. இச்சூழ்நிலையில் ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் போர் மோதலை முடிவுக்குக் கொண்டு வர மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
முதலாவது ஈரானின் இறையாண்மையும் மற்றும் உரிமைகளும் அனைத்துலக மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இரண்டாவது ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்கு நியாயமான நட்டஈடு வழங்கப்பட வேண்டும். மூன்றாவது எதிர்காலத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் மீண்டும் இடம்பெற மாட்டாது என்பதற்கான நிரந்தர அனைத்துலகப் பிணை மற்றும் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் இந்த ஈரான் ஜனாதிபதியின் நிபந்தனைகள் ஈரான் இறைமையில் உறுதியின் உறைவிடமாக நிற்பதையும் இந்த உறுதியால் விழவிழ எழுமாற்றல் உள்ளதாக விளங்குவதையும் உலகுக்குத் தெளிவாக்கின. உலக நாடுகள் அல்ல ஈரான் மக்களும் ஈரானின் இளைய சமுதாயமுமே ஈரானின் இந்த உறுதிக்கான பலமாகவுள்ளனர்.
ஆயினும் இந்த உறுதியின் உறைவிடம் – விழவிழ எழுவோம் என்னும் விருதுவாக்கியங்களை உலகிற்கு போர்முனையில் அறிமுகம் செய்த ஈழத்தமிழர்களால் கடந்த 17 ஆண்டுகளாகத் தங்களை உறுதியின் உறைவிடமாகவும் – விழ விழ எழும் ஆற்றல் உள்ளவர்களாகவும் ஏன் வாழ இயலாது போனது என்கின்ற கேள்வியை இலக்கு இந்நேரத்தில் முன்வைக்க விரும்புகிறது. இதற்கான பதிலைத் தேடினால் மக்களிடை உறுதியின் உறைவிடமாக உள்ளத்தை நிலைப்படுத்தும் சமூக உளவியல் தன்மையை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் தங்கள் தேவையற்ற பேச்சுக்களாலும் தங்கள் இடையிலான இடைவிடாத உட்சண்டை மனப்பான்மையினாலும் நிலைகுலைத்து ஈழத்தமிழ் இளையவர்களுக்குத் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் தங்களின் எதிர்காலத்துக்கான வாழ்வைத் தரும் ஆற்றலில்லையென நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்று வாழ விருப்புள்ள சமுதாயமாக மாற்றியுள்ளது.
இதனால் எந்த இளைய சமுதாயம் தங்கள் மண்ணில் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழின அழிப்புக்கான நீதியை பெற உழைக்க வேண்டுமோ, எந்த இளையவர்கள் தங்களின் தேசிய பிரச்சினைக்குத் தாங்களே தீர்வை சனநாயக வழிகளில் உருவாக்க வேண்டுமோ அந்தப் பணியினைத் தாங்கள் செய்ய வேண்டுமென்ற விழிப்புணர்வு அற்றவர்களாக சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்திக்குள் உள்வாங்கப்படும் தன்மையுள்ளவர்களாக இன்று விளங்குவதே கடந்த 17 ஆண்டுகளாக சனநாயக வழிகளில் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் நகர இயலாதிருப்பதற்கான முக்கியமான காரணமாகவுள்ளதென்பதை ஈரான் போர் தெளிவாக்கியுள்ளது. இனியாவது ஈழத்தமிழர்கள் தங்கள் மக்களையும் தங்கள் இளைய சமுதாயத்தையும் மையப்படுத்தி தங்களின் சனநாயக வழியிலான தேசிய விடுதலைப்போராட்டத்தைத் தொடர முயற்சிக்க உலக இனமாகத் உலகில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் முயற்சிக்க வேண்டுமென்பது இலக்கின் அழைப்பாக உள்ளது.
மேலும் இந்த சமகால உலக நிகழ்வுகள் அனைத்துலக அரசியலில் ஆயுத பலம் கொண்டு இறைமையுள்ள மக்களை எந்த வல்லாண்மையாலும் பிராந்திய மேலாண்மையாலும் அடக்க இயலாது என்பதற்கு அமெரிக்க வல்லாண்மையும் இஸ்ரேல் என்னும் பிராந்திய மேலாண்மையும் இன்றைய உதாரணங்களாக நிற்கின்றன என்பதைத் தெளிவாக்கியுள்ளது. மத்திய கிழக்கின் பாதுகாப்பும் பொருளாதாரமும் மத்திய கிழக்கில் பிறநாட்டுப் படைத்தளங்கள் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக மிகுந்த சிக்கல்களைச் சந்தித்துள்ளன. அதே நேரத்தில் சீனா மத்திய கிழக்கை தனது எரிபொருள் தேவைசார் நிலையில் அணுகுவதையும் ரஷ்யாவும் அதே நோக்கிலேயே உள்ளது என்பதையும் அண்மைக்கால ஈரானின் உட்கட்டுமானங்களில் ஏற்பட்டுள்ள பாரிய இழப்புகள் உலகிற்குத் தெளிவாக்கியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவும் கூட ஸ்பெயினைத் தவிரத் தங்கள் தங்கள் நாடுகளின் பாதுகாப்பு அமைதி மற்றும் வளர்ச்சிகளுக்கு எவற்றைச் செய்யலாம் என்கின்ற நோக்கிலேயே படைநகர்வுகளையும் படைக்கல நகர்வுகளையும் நடத்தி வருகின்றனவே தவிர ஈரானின் மக்களின் உயிர் உடமைகள் நாளாந்த வாழ்வுக்கான பாதுகாப்பு என்பது குறித்து எந்த விதமான அக்கறையையும் காட்டவில்லை. இவற்றைச் சான்றாதாரமாகக் கொண்டு நோக்குகையில் 21ம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான இனஅழிப்பாக 146000க்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனஅழிப்புச் செய்து ஈழத்தமிழர்களின் 31 ஆண்டுகால அவர்களின் உயிருக்கும் உடலுக்கும் உடமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் பாதுகாப்பான விளங்கிய அவர்களின் நடைமுறை அரசின் அனைத்து உட்கட்டுமானங்களையும் தாக்கியழித்த சிறிலங்காவின் அனைத்துலகக் சட்டங்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கான நீதியை எவ்வாறு இந்த அனைத்துலக சமூகம் வழங்குமென்கின்ற கேள்வியை இலக்கு முன்வைக்க விரும்புகிறது.
அவ்வாறே இன்றும் ஈழத்தமிழர்கள் தங்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வை இந்த அனைத்துலக நாட்டவர்கள் புதிய அரசியலமைப்பொன்றைச் சிறிலங்கா உருவாக்கச் செய்து தீர்த்து வைப்பார்கள் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்பதும் அடுத்த கேள்வியாக உள்ளது. ஆயினும் ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 17 ஆண்டுகள் இந்த இரண்டு நோக்குகளையுமே அதாவது ஒன்று அனைத்துலக நீதியைப் பெறல் அடுத்தது அனைத்துலக தீர்வைப் பெறல் எனக் காலத்தையும் உழைப்பையும் வீணடித்து ஈழத்தமிழர்களுக்கான எந்தவொரு சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலையைக் கூட நடைமுறையில் பெற இயலாதவர்களாக உள்ளனர் என்பதே நடைமுறை எதார்த்தமாகவுள்ளது. இதுவே ஈழத்தமிழர்களின் இளைய சமுதாயத்தினர் தங்கள் சொந்த மண்ணில் தங்களுக்கான எதிர்காலம் இல்லை என்ற மனநிலைக்கு உள்ளாகி நாட்டை விட்டு வெளியேறி வாழ முயற்சிப்பதற்குக் மூல காரணமாக உள்ளது.
இவ்வாறான சூழலில் எவ்வாறு ஈழத்தமிழரின் இளைஞர்களிடையே அவர்கள் தங்களின் காலனித்துவத்தால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாண வன்னி அரசுக்களின் இறைமை தங்களிடம் 22.05. 1972இல் மீண்டு அரசற்ற தேச இனமாகத் தாங்கள் வாழ்கின்ற தங்களின் வரலாற்றுத் தாயகமான, இலங்கையின் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மூதூர், அம்பாறை மாவட்டங்களில் யாராலும் பிரிக்க இயலாத தங்களின் தன்னாட்சி உரிமையாக உள்ளதென்ற அடிப்படையில் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தை உருவாக்க இயலும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றோமோ அவ்வளவு விரைவில்தான் ஈழத்தமிழர்களின் தாயகம் தனது இறைமையை மீளுறுதி செய்ய இயலும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
இதற்கு ஈழத்தமிழர்கள் இடையான வேகமான ஒன்று தொடர்பாடல் முறைமைகளும், இரண்டு ஆட்களினதும் பொருட்களினதும் போக்குவரத்து முறைமைகளும் மூன்று அனைத்துலக இனமாகப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் மதியும் நிதியும் என்னும் முத்தள இணைப்புக்களும் ஒருங்குபடுத்தப்பட்ட சமூகமாக ஈழத்தமிழர்கள் நாளாந்தம் செயற்படும் நிலை உருவாக்கப்பட்டாலே ஈழத்தமிழ் இளையவர்கள் தங்கள் மண்ணில் வாழ்வதற்கான கல்வி மற்றும் தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகள் தொழில்முயற்சிகள் வர்த்தக முயற்சிகள் நடைமுறைச்சாத்தியமாகி ஈழத்தமிழ் இளையவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் சந்தைகள் அனைத்துலக நிலையில் இணைப்புற்று அவர்கள் தங்கள் வாழ்வினை தங்கள் தாயகத்தில் வாழ்வதற்கான வளத்தையும் பலத்தையும் பெறுவார்கள் என்பதே இலக்கின் உறுதியான எண்ணம்.
இவ்வாறான தாயக உலக ஈழத்தமிழின இணைப்புக்கு உள்ள சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக தடைகள் ஏராளம் என்பதை இலக்கு மறுக்கவில்லை ஆனால் அவற்றை எவ்வாறு கடந்து செல்வது என்பதே இன்றுள்ள கேள்வி. முதல் சவால் வெறுமனே அரசியல் பேசும் ஊடகங்களாக ஈழத்தமிழர்களின் ஊடகங்கள் மாறிவிட்ட தன்மையையும் இதனைச் சமுக ஊடகத்தினர் தங்கள் வருமானப் பெருக்கத்திற்கும் சமுதாயம் மேலான ஆட்சிப்படுத்தலுக்கும் பயன்படுத்தும் நிகழ்நிலை தன்மையையும் எப்படி மாற்றுவது? அடுத்த சவால் இலங்கையின் மற்றைய இனத்தவர்களிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட இனமாகவும் இந்தியத் துணைக்கண்ட மக்களிடம் இருந்தும் உலக மக்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்ட மனநிலையிலும் தங்களுக்குள் தாங்களே கருத்து மோதல்களும் முரண்பாடுகளும் வளர்த்து வாழும் வாழ்வை எப்படி மாற்றுவது? இதற்கு ஒரே வழி ஈழத்தமிழினத்திற்கு சக்தியளிக்கக் கூடிய வகையில் அறிவூட்டல் வழி அறியாமையை நீக்கலும் பொருளாதாரத் திட்டமிடல்களை உருவாக்குவதன் வழி வறுமையை நீக்குவதும் தான். இவற்றைச் செய்ய வல்ல பலமிக்க சிவில் சமூகங்களையும், அதற்கு உழைக்க வல்ல ஊடகத்தினையும் அனைத்துலக ஈழத்தமிழினம் உருவாக்க உழைக்க வேண்டுமென்பதே இலக்கின் இவ்வாரச் சிந்தனையாகவுள்ளது. இதுவே இன்றைய உலக மாற்றத்தை எதிர்கொண்டு ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையை மீளுறுதி செய்ய உதவும் என்பது இலக்கின் உறுதியான நம்பிக்கை.
ஆசிரியர்




