மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள், படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி

இலங்கையில்  பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளதால் தப்பித்து விட்டோம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். அவ்வாறு மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகளின் பின்னணியில் அரசியல் தலையீடு மற்றும் அரசியல் சக்தி இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலை எமது அரசாங்கத்தில் ஒருபோதும் ஏற்படாது. உங்களின் கடமைகளை தாய்நாட்டுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படுத்துங்கள். அதற்கு தைரியமாக செயற்படுங்கள்  என்று, காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

”போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய பொலிஸார் அதற்கு உடந்தையாக செயற்படுவார்களாயின் அதுவே பாரிய அழிவாக அமையும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பழைய பழக்கத்தை கைவிட வேண்டும். பழக்கத்தை கைவிடாவிடின் பொலிஸ் சேவையை கைவிட தயாராக வேண்டும்” என்றார்.

159 ஆவது தேசிய  காவல்துறை  தினத்தை முன்னிட்டு  கொழும்பு  காவல்துறை மைதானத்தில்   புதன்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.