இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் மீதும் விசாரணை!

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினர், கொழும்பு கோட்டை நீதவான் நெத்திகுமாரவிடம் அறிவித்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் வைத்து குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கும் இவர்கள் மூவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஜீவராஜா சுஜீபன், இலங்கோ இசைவித்தன் மற்றும் யோகராஜா ஆகிய மூவரே இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.