ஈழத் தமிழர் இறைமை மீளுறுதிக்காக பேரிடர் மீண்டெழலலுக்கான மாநாடுகளை அனைத்துலக தமிழர் முன்னெடுக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 370

இலக்கின் அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் 2025ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். இவ்வாண்டு கிறிஸ்மஸ் பருவகாலத்தில் உலகெங்கும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலைச் சீர்கேடுகள், போர்களின் வழியாக சாதாரண மக்கள் வாழ்வுக்கு இனங்காணக்கூடிய அச்சங்களை வாழ்வாகக் காணுகின்ற நிலையில் வாழ்கின்றனர்.  “இச்சிறியோரில் ஒருவருக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என மனிதநேய இரக்கச் செயல்களே இறையாசியைப் பெறுவதற்கான ஒரே ஒரு வழியெனக் கிறிஸ்து தானே கூறிய வார்த்தைகளை மனதிருத்தி, ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து  பாதிப்புற்ற மக்களுக்கு அவர்கள் மீண்டும் பாதுகாப்பான அமைதிவாழ்வுக்கும் வளர்ச்சிகளுக்கும் திரும்புவதற்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச் செய்யும் காலமாக இந்தக் கிறிஸ்மஸ் பருவகாலத்தை முன்னெடுக்க வேண்டுமென்பது இலக்கின் கருத்தாக உள்ளது.
ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் அவர்களுடைய வரலாற்றுத் தாயகத்தில் அவர்களின் இறைமையையும் தேசியத்தையும் நீக்கி, வரலாற்றில் வந்தேறிய குடிகள் (habitant) முன்னாள் சிறிலங்கா அமைச்சர் காமினி திசநாயக்க திம்புக்கோட்பாட்டை ஏற்க மறுத்து வெளியிட்ட அதே உத்தியைப் பயன்படுத்தி “ஏக்கிய இராஜ்ஜிய” அரசியலமைப்பை கொண்டு வருவதற்குச் சிறிலங்காவின் இன்றைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்கள் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வேகமாகச் செயற்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி பாராளுமன்ற முறைமை என்னும் நவகாலனித்துவ ஆட்சி முறைமைக்குள் சலுகைகளை பெற்று கூட்டு வாழ்வு வாழ விரும்பும் விருப்புடையவர்களாக இன்று உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் கூட்டாட்சிக் கோரிக்கைகள் ஈழத்தமிழர்களால் பலநிலைகளில் பலநாடுகளின் பக்கத்துணையுடன் முன்வைக்கப்பட்டு வரும் நிகழ்வுகளும் காணப்படுகின்றன.
இந்நிலையில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து ஏக்கிய இராஜ்ஜிய அரசியலமைப்பின் வருகையை இந்திய மத்திய அரசின் அழுத்தங்களின் வழியாகத் தடுப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஈழத்தமிழர் தமிழகத்தமிழர்களின் இனத்துவ உறவைப் பகைமையாக்கும் வழியில் தொடரும் வடக்கின் கடலில் இந்திய ரோலர் படகுகளின் மீன்பிடிப் பிரச்சினை குறித்தும் பேசியுள்ளனர். இவர்கள் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் இந்தத் தங்கள் கோரிக்கைக்கு உதவுமாறு கோரி வருகைகளை மேற்கொள்ளக் கூடுமென்கிற எதிர்பார்ப்புக்களும் உள்ளன.
அதே வேளை ஜனதா விமுக்கி பெரமுனையின் ரில்வின் டி சில்வா இந்தியாவுக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ள நேரத்தில் இவர்களின் இந்த நகர்வும், தமிழரசுக்கட்சியினர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த மற்றைய தமிழர் சனநாயகக் கட்சிகள் என்னும் கட்சிகளையும் இணைத்து இந்தியத்தூதுவரை 23ம் திகதி சந்திக்கவுள்ளனர்.
இவ்வாறாக மீளவும் ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் கட்சியினர் தமிழகத்தையும் மத்திய அரசையும் உதவிக்கு அழைத்துள்ள போதிலும் இவர்களிடை எவருக்குமே ஈழத்தமிழர்களின் சொந்த மண் பாதிப்புக்குள்ளாகிறது என்ற ஈழத்தமிழரின் மக்கள் இறைமையின் அடிப்படையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்காது ஏதோ ஒரு வகையில் சிறிலங்காவின் வேகத்தை மந்தப்படுத்த முயற்சிக்கின்றார்களே தவிர சிறிலங்காவின் செயற்பாடு ஈழத்தமிழரின் தாயக தேசிய சுயநிர்ணய உரிமைகளை முற்றாக மாற்றியமைக்கும் ஆக்கிரமிப்பு ஒடுக்குமுறை என்கின்ற உண்மையை உலகுக்கோ தமிழகத்துக்கோ இந்த அரசியல்வாதிகள் யாருமே துணிந்து கூறவில்லை என்பதே உண்மை.
இதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பின் 6ம் திருத்தமும் சிறிலங்காவின் பயங்கரவாதத் தடைச்சட்டமும் இவர்களுக்கான அச்சமாக உள்ளதென்பது வெளிப்படையான உண்மை. இத்தகைய நிலையில் அனைத்துலகிலும் வாழும் ஈழத்தமிழர்கள் தான் ஈழத்தமிழர் தாயகத்தின் இன்றைய அரசியல் எதார்த்தத்தைத் தெளிவுபடுத்தக் கூடிய கருத்தரங்குகளை மாநாடுகளை நடாத்த வேண்டிய தேவை பலமாக உள்ளது.
இதனை அனைத்துலகத் தமிழர்கள் செய்கின்ற பொழுது தாயகமக்களிடை இதன் தேவை குறித்த தெளிவுகளை முன்னெடுக்க வேண்டியது முக்கியம். அதே வேளை இது பிரிவினைக்கான தூண்டல் அல்ல ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்வதற்கான சனநாயக வழி என்பது அனைத்துலகிற்கும் தெளிவாக்கப்பட வேண்டியதும் முக்கியம். இத்தகைய மாநாடுகள் கருத்தரங்குகள் அனைத்து அனைத்துலகத் தமிழர்களையும் வேறுபாடுகளைக் கடந்து இணைத்து முன்னெடுக்கப்பட வேண்டியது எல்லாவற்றையும் விட அதிமுக்கியமான தேவையாக உள்ளது. இதனைச் செயற்படுத்த வெறுப்புப் பேச்சுக்களை கைவிடுவது மட்டுமின்றி ஊடகமொழியை யாரையும் புண்படுத்தாது அமைத்துக்கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. சனநாயக வழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகையில் அணுகுமுறையில் வேறுபாடுகள் வரலாம். ஆனால் அந்த அணுகுமுறைகள் தெளிவாக்கப்பட்டு பல்குழுக்கள் பாழ்செய்யும் உட்பகைகள் வராது செயற்பட வேண்டியது தலையாய தேவையாக உள்ளது. இதற்கு இதுவரை சிறிய அதிகாரங்களுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் செயற்பாட்டாளர்கள் அவர்களது அதிகாரப்பட்ட அணுகுமுறைகளைக் கைவிட்டு அவர்களது நோக்குகளில் நின்றபடியே பொதுநோக்கில் இணைவது மேற்குலக அரசியல் மொழியில் கூறுவதானால் “பொதுநன்மை” க்காக தங்கள் தங்கள் கட்சிநிலைகள் அமைப்பு நிலைகள் இயக்க நிலைகளில் நின்றவாறே ஒருங்கிணைதல் அவசியம்.
இன்று உலகம் கூட்டாண்மை பங்காண்மைகள் வழியாகவே நாளாந்த அரசியலை பொருளாதாரத்தை மையப்படுத்தி நடாத்திக் கொண்டிருக்கிறது. இதுவே உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையின் பொதுப்பண்பாக இன்று மாறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கமும் இந்தப் பொதுப்பண்பை இனங்கண்டு தனது கொள்கைக் கடும்போக்குகளில் நில்லாது சாதுரியமாக நடந்து வருகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தில் நடைமுறையில் மிகமிகப்பலவீனமான நிலையில் இருப்பதே கடந்த 16 ஆண்டுகளாக தங்களுக்கு நடாத்தப்பட்ட இனஅழிப்பிற்கான உலக நீதியைக் கூடப் பெற இயலாது இருப்பதன் மூலகாரணமாக உள்ளது. மேலும் இந்த மாநாடுகள் கருத்தரங்குகள் தனியே அரசியலை மட்டும் உள்ளடக்காது மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற வகையில் மீள் உற்பத்தி செய்யத் தக்க வகையில் எல்லாத்துறைகளிலும் நடாத்தப்பட வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.
இலக்கின் 2021ம் ஆண்டு  188 வது ஆசிரியத் தலையங்கத்தில் “ஈழத்தமிழருக்கான இடர்முகாமைத்துவம்  உடன் உருவாக்கப்பட வேண்டும்” என்று எழுதி அதனைக் கட்டுரைகள் மூலமும் இலக்கு வலியுறுத்தியது.ஆனால் அதனைச் செய்யாது விட்டதன் விளைவுகளை இன்று தாயகமும் தாயக மக்களும் நடைமுறையில் காண்கின்றனர். எனவே இந்த மாநாடுகள் கருத்தரங்குகள் வழியாக இறைமையை மீளுறுதி செய்தலையும் பேரிடரில் இருந்து மீண்டெழுதலையும் தாயக மக்கள் அடைவதற்கு இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதே இலக்கின் ஆணித்தரமான எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்

Tamil News