அனைத்துலக குடும்ப நாள்:வருமானப் பற்றாக்குறையால் பல குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன-கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால் 

அனைத்துலக குடும்பங்கள் நாள் உலகம் முழுவதும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. தனிநபர்களும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் இந்த நாளை கொண்டாட தேர்வு செய்கிறார்கள்.

இந்நிலையில்,அனைத்துலக குடும்ப நாளை முன்னிட்டு கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால்  உடன் ஒரு நேர்காணல்…

கேள்வி:-குடும்பத்தின் முக்கியத்துவம் குறித்து கூறுங்கள்?

பதில்:-
குடும்பம் ஒரு கதம்பம் என்பார்கள்.அங்கத்தவர்கள் பலரினதும் சிறப்பான பங்களிப்பு குடும்பத்தின் தலை நிமிர்விற்கு தோள் கொடுக்கின்றது. குடும்பம் என்பது பல விடயங்களுக்கு அச்சாணியாக திகழுகின்றது.நல்லதொரு குடும்பம் நல்ல பிரஜைகளை சமூகத்திற்கு, நாட்டிற்கு உருவாக்கிக் கொடுக்கின்றது.நாட்டிற்கு பொருத்தப்பாடுடைய பிரஜைகளை உருவாக்குவதில் குடும்பத்தின் வகிபாகம் மிகவும் அளப்பரியது என்றே கூறலாம்.இந்த வகையில் கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் என்று குடும்ப வகைகள் காணப்படுகின்றன.வெளிநாடுகளில் இதனிலும் வேறுபட்ட குடும்ப வகைகள் காணப்படுகின்றமையும் நோக்கத்தக்கதாகும்.சமகால சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் கூட்டுக் குடும்பங்கள் வலுவிழந்து தனிக்குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.தனிக் குடும்ப ஆதிக்கமானது பிள்ளைகளின் கருத்துப் பரிமாற்றத்திற்கு முட்டுக்கட்டையாக விளங்குவதாக விமர்சனங்கள் இருந்து வருவதும் தெரிந்ததாகும்.

கூட்டுக் குடும்பத்தில் தாத்தா,பாட்டி உள்ளிட்ட மூத்தோரின் இடம்பெறுகை காணப்படுகின்றது.இது பிள்ளைகளை ஒழுக்க ரீதியாக சிறந்தவர்களாக வளர்த்தெடுப்பதற்கு உந்துசக்தியாக அமைகின்றது.மூத்தோரின் வழிகாட்டல்கள் பிள்ளைகளுக்கு சரிவர கிடைப்பதனால் பிள்ளைகள் சரியான பாதையில் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.தொடர்பாடல் போன்றவற்றின் விருத்திக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும்  இது அடிப்படையாக அமைகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.ஆனால் தனிக்குடும்பத்தில் இதனை எதிர்பார்க்க முடியாது.பெற்றோர் இருவரும் தொழில் செய்யும் நிலையில் பிள்ளைகள் வேலையாட்களிடமே ஒப்படைக்கப்படுகின்றனர்.இவ்வாறு ஒப்படைக்கப்படும் பிள்ளைகள் சிலர் நெறி தவறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே காணப்படுகின்றன.எனவே தனிக் குடும்பக் கலாச்சாரத்திலும் பார்க்க கூட்டுக் குடும்ப கலாசாரம் சிறந்ததாகுமென்பது புத்திஜீவிகளின் கருத்தாக உள்ளது.

கேள்வி:-2009 க்கு பிந்திய காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மக்களின் குடும்ப செல்நெறிகள் எவ்வாறுள்ளன?

பதில்:-
இலங்கையின் உள்ளூர் போர் 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இந்த போர் காரணமாக இலங்கை மக்கள் பல்வேறு துன்ப துயரங்களையும் அனுபவிக்க நேர்ந்தது.தமிழ் மக்கள் மீதான பல்வேறு ஒடுக்குமுறைகள் மற்றும் புறக்கணிப்புக்கள் போரின் தோற்றுவாயாக அமைந்தது.போரின் காரணமாக இலங்கையின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கக்கூடிய இளைஞர் படை இல்லாதொழிக்கப்பட்டது.போரின் உக்கிரமானது நாட்டின் அபிவிருத்தியை தடைப்படுத்தி இருந்ததோடு வங்குரோத்து நிலைக்கும் நாட்டை இட்டுச் சென்றது என்றால் மிகையாகாது.சர்வதேசத்தின் முன்னால் நாடு தலைகுனியும் நிலையும் ஏற்பட்டது.

போர் 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோதும் இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறைந்தபாடில்லை.பல குடும்பங்கள் இன்னும் வாழ வழியின்றி கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.பலர் மாறாத வலியுடன் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட கையோடு இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று தமிழ் மக்கள் நம்பி இருந்தனர்.ஆயினும் இது தொடர்பாக இதயசுத்தியுடனான செயற்பாடுகள் இடம்பெறாத நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இன்னும் இழுத்தடிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வருகின்றது.சமஷ்டி அடிப்படையிலான தீர்வு, 13 ஆவது திருத்தச் சட்டம், 13 ஐ விஞ்சிய தீர்வு என்றெல்லாம் பேசப்பட்டபோதும் தீர்வு என்பது கானல் நீராகி வருவதையே அவதானிக்க முடிகின்றது.போரினால் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் அங்கவீனர்களாகியுள்ள நிலையில் இவர்களின் சமகால வருமான நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

கேள்வி:-2009 இன் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில்  விதவைப் பெண்களின் தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில் :-
உண்மைதான்.வடக்கில் கணவனை இழந்த 63345 பெண் குடும்பத் தலைவிகள் வாழ்ந்து கொண்டிருப்பதாக கடந்தகால தகவலொன்று வலியுறுத்துகின்றது.அவர்களில் 8004 பெண்கள் போரின் காரணமாக கணவனை இழந்த நிலையில் உள்ளதுடன் குடும்பத் தலைவிகளாகவும் இருக்கின்றனர்.அதேபோன்று 38991 பெண்கள் இயற்கையாக கணவனை இழந்த நிலையில் பெண் குடும்பத் தலைவிகளாக உள்ளனர்.இதேபோல் 7253 பேர் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் பெண் குடும்பத் தலைவிகளாக உள்ளனர்.அது‌மட்டுமல்லாது ஏனைய காரணங்களினால் 9097 பெண்கள் குடும்பத் தலைவிகளாக இருந்து வருவதாக தெரியவருகின்றது.ஏனைய காரணிகளாக கணவன் ஊனமுற்றவராக இருத்தல் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவராக இருத்தல் போன்ற நிலைகளிலும் குடும்பங்கள் பல காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.எனவே இதன் காரணமாக பலரின் குடும்ப கலாசாரம் விரிசலடைந்திருக்கின்றது என்றுதான் கூறவேண்டும்.

கேள்வி:-தொழில் நிலைமைகள் எவ்வாறுள்ளன?

பதில்:-
போரின் பின்னரான காலப்பகுதி தொழிற்றுறையை பொறுத்தவரையில் ஒரு சவாலான காலப்பகுதியாகவே இருந்து வருகின்றது.இளைஞர்கள் பலர் தொழிலின்றி அல்லல்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.சில இளைஞர்கள் கல்வித் தகைமைக்கேற்ற தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் கிடைக்கும் ஏதேனும் ஒரு தொழிலை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

ஆண்களை தலைவர்களாக கொண்ட குடும்பங்கள் ஓரளவுக்கு வருமான ரீதியில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளன.இதிலும் பல குடும்பங்களின்  நிரந்தர வருமான மட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வருமான ரீதியாக பல்வேறு நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.பெண்களில் வலது குறைந்தோரும் உள்ளடங்குகின்றனர்.குடும்பத்திற்கான வருமான ஈட்டலில் பெண்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர்வேறு மார்க்கமின்றி .நுண்கடன்களைப் பெறும் பெண்களின் தொகை அதிகமாக காணப்படுகின்றது.” நுண்கடன்களைப் பெற்றுக் கொள்ளும் பெண்கள் அதனை மீள செலுத்த முடியாமல் பாலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாரிய அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் ” என்று ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் ஒருவர் 2018 இல் சுட்டிக்காட்டி இருந்தார்.இது மோசமான ஒரு நிலையாகும்.வருமான ஈட்டல்களுக்காக சிரமப்படும் பெண்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் செயலாக இது அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இத்தகைய நிலைமைகளால் சிலரின் விரக்தி நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இதேவேளை பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு வாழ்வாதார ஆதரவுக்காக  கடந்த காலத்தில் முப்பது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு இதில் 29 ஆயிரத்து 513 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வலியுறுத்துகின்றன.

கேள்வி:-வர்த்தக நிலைமைகள் எவ்வாறுள்ளன?

பதில் :-
வடபகுதி வர்த்தக விடயங்களுக்கு பெயர் போன ஒரு இடமாகும்.சமகாலத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் வெளியார் ஊடுருவும் நிலை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.இதனால் உள்ளூர் வர்த்தகர்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றனர்.உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் கேள்விக்குறியாகி வரும் நிலையில் இந்நிலை மாற்றப்பட்டு சந்தை வாய்ப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படுதல் வேண்டும்.உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு விவசாய கடன் வசதிகள் விரிவுபடுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும்.அத்தோடு பசளைகள், மருந்து வகைகள் என்பன சலுகை விலையில் பெற்றுக் கொடுக்கப்படுதல் வேண்டும்.நிவாரண அதிகரிப்பும் மிகவும் அவசியமாகும்.

கேள்வி:-மருத்துவ வசதிகள் எவ்வாறுள்ளன?

பதில்:-
நாட்டின் சனத்தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஈடுகொடுப்பதற்கு மருத்துவ வசதிகளிலும் அதிகரிப்பு தேவைப்படுகின்றது.இதனடிப்படையில் வடக்கு பகுதியிலும் தற்போது உள்ளதைக் காட்டிலும் மருத்துவ வசதிகளில் ஒரு அபிவிருத்தி கட்டாயமாக தேவைப்படுகின்றது.மருத்துவ வசதிகள் சகலரையும் சென்றடையும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.அரச வைத்திய சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு மக்களின் நலன்கள் உறுதிப்படுத்தப்படுதல் மிகவும் அவசியமாகும்.இது சுகதேகியான மக்கள் உருவாக்கத்திற்கு வித்திடுவதுடன் நாட்டின் அபிவிருத்திக்கும்  வலு சேர்ப்பதாக அமையுமென திடமாக நம்ப முடியும்.

கேள்வி:-வருமான மட்டம் குறைந்து வரும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிற சவால்களை கூறுங்கள்?

பதில்:-
எந்த ஒரு விடயத்திற்கும் பொருளாதார மேம்பாடு அவசியமாகும்.தனி மனிதன், குடும்பம், சமூகம், நாடு என்று எல்லா நிலைகளிலும் பொருளாதார அபிவிருத்தி பக்கபலமாக அமைந்து விளங்குகின்றது.பொருளாதார பின்னடைவு காரணமாக மலையக சமூகம் உள்ளிட்ட பின்தங்கிய பல சமூகங்கள் பல்வேறு சவால்களையும் சந்தித்து வருவது தெரிந்த விடயமாகும்.

இந்த வகையில் வடபகுதியிலும் பல குடும்பங்கள் வருமானமின்றி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்துவது புதிய விடயமல்ல.இந்த வகையில் வருமான பற்றாக்குறை காரணமாக பல குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வி உரிமைகள் பறிபோகும் அபாயமுள்ளது.நாட்டின் எதிர்கால சிற்பிகளான சிறுவர்களின் கல்வி உரிமை இவ்வாறு பறிபோவது பல்வேறு தாக்க விளைவுகளுக்கும் அடிப்படையாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.கலாசாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்துக்கு பெற்றுக் கொடுப்பது கல்வி.மனிதரிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வது கல்வி என்று கல்விக்கு பல்வேறு வரைவிலக்கணங்களைக் கூறுவார்கள்.இந்நிலையில் இத்தகைய கல்வி உரிமையானது வருமானப் பற்றாக்குறையால் பறித்தெடுக்கப்படுமாயின் அது மிகப்பெரிய கொடுமையாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.              இதுபோன்றே சுகாதாரம், போஷாக்கு போன்றன தொடர்பிலும் வருமானப் பற்றாக்குறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.இதனாலும் பல குடும்பங்களின் இயல்பான செயற்பாடுகள் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.