இலங்கையின் பொருளாதார நெருக்களை தீர்க்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்புகள் பூச்செண்டுகளாக கிடைக்கப்பெறுகின்றன. இவற்றை பயன்படுத்தி நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதா அல்லது அழிவுக்கு வழிவிடுவதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அஸ்வெசும திட்டம் குறித்து பல்வேறு முரணான கருத்துக்கள் வெளியிடப்படுகிறது. உண்மையில் உலக வங்கியின் ஒத்துழைப்புகனை பெற்றே இவ்வாறான மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்கிறோம்.
சர்வதேச நாணய நதியத்துடன் வெற்றிகரமாக ஒப்பந்தங்களை நிறைவு செய்தமையினால் உலக வங்கி உட்பட பல சர்வதேச அமைப்புகள் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை செய்கின்றன.
எனவே இந்த ஒத்துழைப்புகளை நாட்டினதும் மக்களினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும். கடன் மறுசீரமைப்புகளும் எதிர்கால இலங்கையின் அபிவிருத்திக்காகவே முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே தற்போது படிப்படியாக நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுவருகிறோம். இலங்கைக்கு 50 ஆயிரம் தொன் உரம் இலவசமாக கிடைத்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் மற்றும் ஜேர்மன் உட்பட பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது, எமது திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.
எனவே நாட்டை நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் சர்தேச உதவிகளும் ஒத்துழைப்புகளும் மலர்ச்செண்டுகளாக கிடைக்கப்பெறுகின்றன.
இவற்றை மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் நாட்டின் எதிர்காலததிற்காகவும் பயன்படுத்த வேண்டும். அவ்வர்று செய்தால் நாடு முன்னேற்றம் அடையும். இல்லை என்றால் நெருக்கடிகளும் அழிவுகளுமே மிச்சமாகும் என்றும் தெரிவித்தார்.