வவுனியா மாநகர சபை முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடைக்கால தடை!

வவுனியா மாநகர சபை முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வரான பரமேஸ்வரன் கார்த்திபன் ஆகியோர் தமது பதவிகளை தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி, பிரதிவாதிகளுக்கு எதிரான மனு மீதான விசாரணை முடியும் வரை இடைக்காலத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மனுவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. வவுனியா மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு கோரப்பட்ட போது, ஜனநாயக தேசிய முன்னணியின் மேலதிக உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பரமேஸ்வரன் கார்த்தீபன் துணை முதல்வர் பதவியைக் கோரி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்திருந்தார்.

எனினும், அவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்துவரும் நிலையில், மாநகர சபையில் போட்டியிட்டமை மற்றும் பதவியை பெற்றமை என்பன சட்ட விதிகளை மீறிய செயற்பாடுகள் என்று குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து, வவுனியா மாநகரசபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான கந்தையா விஜயகுமார் மற்றும் சுயேட்சைக்குழுவின் பிரேமதாஸ் சிவசுப்பிரமணியம் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் கடந்த நான்கு தவணைகளாக இடம்பெற்ற விசாரணையின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது