6ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை

தேசிய கல்வி நிறுவனத்தினால் அச்சிடப்பட்ட 6ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, கல்விப் பொதுத்தராதர நிபுணர்களுடன் தற்போது தீவிர ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பக்கத்தை நீக்கிய பின்னர், அவ்விடத்தில் புதிய திருத்தப்பட்ட பக்கத்தை அச்சிட்டு இணைப்பதா? அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்வதா? என்பது குறித்து மூன்று திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்தார்.

மேலும், பாடப்புத்தகத்தின் உள்ளடக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசாங்கத்திற்கு ஏற்படும் மேலதிக செலவுகளைக் குறைக்கும் வகையிலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவுள்ளதுடன், இது தொடர்பில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் மற்றும் புத்தக வெளியீட்டுத் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்குப் புத்தகங்களை விநியோகிப்பதற்காக, ஜனவரி மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் இப்பிரச்சினைக்குச் சுமூகமான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தரம் 6 மாணவர்களுக்காக சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இதற்காக 6 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. எனவே, முழுப் புத்தகத்தையும் மீண்டும் அச்சிடப் போவதில்லை எனவும், பிரச்சினைக்குரிய பக்கத்தை மாத்திரம் அகற்றிவிட்டு நிபுணர்களின் ஆலோசனைப்படி குறித்த விடயத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவனத்தினால் அச்சிடப்பட்ட 6ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் தன்பாலினம் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.