வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக எவராவது உயிரிழந்தனர் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிதி நிறுவனங்களின் நெருக்கடி காரணமாக பலர் உயிர்மாய்த்துள்ளனர் என்ற விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேற்றுமுன்தினம் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் இயங்கும் அரச வங்கிகள், தனியார் வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் அனுமதிபெற்ற நுண்கடன் நிறுவனங்களின் தரவுகளை வழங்குமாறும் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே, வடக்கு மாகாணத்தில் நுண்கடன் நெருக்கடியால் எவரும் உயிரிழக்கவில்லை என்று பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள் ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்கூறியதாவது:-
வடக்கு மாகாணத்தில் 28 அரச வங்கிகளும், 38 தனியார் வங்கிகளும், 78 நிதி நிறுவனங்களும், 13 அனுமதிபெற்ற நுண்கடன் நிதி நிறுவனங்களும் உள்ளன. அரச மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்கும்போது அறவிடப்படும் வட்டி வீதங்கள் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்துக்கமைய செயற்படுத்தப்படுகின்றன. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக எவரேனும் உயிர் மாய்த்துள்ளனர் என அறிக்கையிடப்படவில்லை.
நுண்கடன் கண்காணித்தல் அதிகாரசபை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாள்களில் அந்த வரைவு நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும். அதற்கமைய மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக் கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
கடந்த காலங்களில் அரசாங்க அதிகாரிகளும், சமூக அமைப்புகளும் நுண்நிதிக் கடன்களால் உயிரிழப்புகள் இடம்பெற்றிருந்தன என்பதை அறிக்கையிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



