“சொந்தமாக ஒரு இடம், ஒரு அழகான வாழ்க்கை” எனும் மகுட வாசகத்துடன், 2026ஆம் ஆண்டிற்கான தேசிய வீட்டுவசதித் திட்டத்தின் ஆரம்ப விழா எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இவ்விழா இடம்பெறவுள்ளதாக வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் அறிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீசாலை கிராம சேவக பிரிவில் இந்த ஆரம்ப விழா நடைபெறவுள்ளது.
இதன்போது, யாழ் தீபகற்பத்தில் வீடற்ற நிலையில் உள்ள 500 குடும்பங்களுக்கு புதிய வீடுகளைக் கட்டுவதற்கான காசோலைகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்த வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி பயனாளிகளுக்கு ஒரே தடவையில் வழங்கப்படாமல், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்திற்கேற்ப மூன்று தவணைகளாக விடுவிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக வடக்கு, கிழக்கில் அடுத்த ஆண்டிற்குள் 2,500 வீடுகளைக் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் 31,318 வீடுகளைக் கட்டி முடித்து அடுத்த ஆண்டு மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.



