இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினம்: கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம்!

இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின நிகழ்வு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் திங்கட்கிழமை  (ஜன 26) கொழும்பில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கொழும்பு, ‘இந்திய இல்லத்தில்’ நடைபெற்ற இந்த பிரதான நிகழ்வுக்கு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமை தாங்கினார்.

காலை   ஆரம்பமான இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவருக்கு அங்கு மரியாதை அணிவகுப்பும் நடைபெற்றது

இந்நிகழ்வில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவினது குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாசித்தார்.

அதில்,

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள் அனைவரும் இந்த குடியரசு தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறோம். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவின் அடிப்படை ஆவணம் நமது அரசியல் சாசனம் ஆகும். இதில் பொறிக்கப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய இலட்சியங்களே நமது குடியரசை வரையறுக்கின்றன.

எல்லைகளில் விழிப்புடன் இருக்கும் முப்படை வீரர்களுக்கும், உள்நாட்டுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொலிஸ் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினருக்கும் எனது பாராட்டுகள்.

நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள், வளர்ச்சிக்கு வித்திடும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், நாட்டை மறுசீரமைக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் கலைஞர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இந்தியாவைத் தற்சார்பு நாடாக மாற்ற உழைக்கும் தொழில்முனைவோரின் பங்களிப்பு அளப்பரியது.

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. விண்வெளி முதல் பாதுகாப்புப் படைகள் வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வருகின்றனர்.

குறிப்பாக விளையாட்டுத் துறையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தியப் பெண்கள் அணி ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வரலாற்று சாதனை படைத்தது.

பார்வையற்றோருக்கான மகளிர் ரி – 20 உலகக்கிண்ணத்தையும் இந்தியா வென்றது.

செஸ் உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் இரு இந்தியப் பெண்கள் போட்டியிட்டது இந்தியாவின் புதல்விகளின் ஆதிக்கத்திற்குச் சான்றாகும்.

உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். ‘ஒரே நாடு, ஒரே சந்தை’ என்ற ஜிஎஸ்டி (GST) முறை மற்றும் புதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் நமது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும்.

இந்திய சமூகம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வியக்கத்தக்க வகையில் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று உலகின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதியளவு இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது.

பயங்கரவாத உட்கட்டமைப்புகளுக்கு எதிராக நமது நாடு நடத்திய துல்லியத் தாக்குதல்கள் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) மூலம் பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்டன. நமது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் ஐஎன்எஸ் வம்சி (INS Vamshi) நீர்மூழ்கிக் கப்பல் போன்றவை நமது தற்காப்பு வலிமையைப் பறைசாற்றுகின்றன.

இந்த குடியரசு தின நன்நாளில் ‘தேசத்துக்கு முன்னுரிமை’ என்ற உணர்வுடன் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், பாதுகாப்பும் பெருகட்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.