இந்திய பிரதமர் நரேந்திர மோடியால், உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும் என்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பாக கடந்த ஜூலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் கடந்த ஆகஸ்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் அவர் சந்தித்து பேசினார். இதன்தொடர்ச்சியாக கடந்த 22, 23-ம் தேதிகளில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, “ரஷ்யா, உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது” என்று உறுதி அளித்தார்.
இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகளை இந்தியா பெற்றிருக்கிறது. சர்வதேச அரசியலில் அந்த நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும். இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருக்கிறது.