இந்திய கடற்படைத் தளபதி இலங்கைக்குப் பயணம்!

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (22)  நாட்டை வந்தடைந்தார். இந்திய கடற்படை தளபதி இந்த பயணத்தின் போது  பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கஞ்சன பனாகொட உட்பட பல முக்கிய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்புக்களின்போது கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் ‘மாறும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் நோக்குநிலை’ என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெறவுள்ள 12ஆவது காலி உரையாடல் 2025 – சர்வதேச கடல்சார் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல், பணியாளர்கள் பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கை – இந்தியா கடற்படைப் பயிற்சி, பயிற்சி மற்றும் நீரியல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பிற செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் இந்தியக் கடற்படை இலங்கை கடற்படையுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை தளபதியின் இவ்விஜயமானது பரஸ்பர மரியாதை, கடல்சார் நம்பிக்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, இந்தியா – இலங்கை உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.