இந்திய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி, Admiral Dinesh K Tripathi, செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இந்திய கடற்படைத் தளபதி மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் முக்கியமான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் கூட்டு அணுகுமுறையுடன் செயற்படுவதன் முக்கியத்துவமும் பற்றி வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை இந்திய அரசாங்கத்தினால் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை கடற்படை 12ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யும் காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு – 2025 இல் கலந்துகொண்டதன் பின்னர், 2025 செப்டம்பர் 25ஆம் திகதி இந்திய கடற்படைத் தலைவர் Admiral Dinesh K Tripathi மீண்டும் நாடு திரும்ப இருக்கின்றார்.

இச்சந்திப்பில் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் தெற்காசிய மற்றும் SARCC பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பத்திரண ஆகியோரும் கலந்துகொண்டனர்.