சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 12 மீனவர்களில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினிதி துவ உள்ளிட்ட இரு ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 12 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி அவர்கள் மீன்பிடிப் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் வென்னப்புவ நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரின் கப்பலொன்று இவர்களை வழிமறித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீன்பிடி படகிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அதிகாரிகள், மீனவர்களிடம் போதைப்பொருள் மற்றும் செய்மதித் தொலைபேசிகள் உள்ளனவா எனக் கேட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், இந்திய கடற்படையினர் மீனவர்களை விலங்குகளைப் போலக் கீழே தள்ளி மிதித்தும், ஐஸ் கட்டிகள் மீது படுக்க வைத்தும் முதுகுப் பகுதியில் கடுமையாகத் தாக்கியதாகக் குறிப்பிட்டனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகச் சந்தேகம் எழுப்பி, படகிலிருந்த உபகரணங்கள் மற்றும் உடமைகளைச் சேதப்படுத்தியதோடு, மீனவர்களுக்குக் கடும் உடல் ரீதியான சித்திரவதைகளை இந்திய அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இலங்கை எல்லைக்கு மிக அண்மித்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
காயமடைந்த மீனவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு இன்று அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் இருவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய மீனவர்கள் படகுகளுடன் கரைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கையாள்வதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இலங்கை கடற்படைக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உறவினர்களால் வைத்தியசாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



