யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனியார் விடுதியில் இராப்போசன சந்திப்பில் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, இந்திய உயர்ஸ்தானிகர், இந்தியாவின் அபிவிருத்தித் திட்டங்கள் நிலைபேறான வளர்ச்சியை நோக்குவதாகவும், போரால் பாதிக்கப்பட்ட வடக்கின் மறுவாழ்வுக்கு தொடர்ந்து கரிசனையுடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
மேற்குலக நாடுகளும் முதலீடுகளுக்கு இருதரப்பு உறவுகளை அடிப்படையாகக் கொள்கின்றன. ஆனால், சீனாவின் முதலீடுகள் நிலைபேறற்றவையாக இருப்பதால், இலங்கையின் கடன்சுமையை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கவலை வெளியிட்டார்.
மேலும், சீன தூதுவரின் அரசியல் தொடர்பான கருத்துக்கள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடாக அமையும் எனவும், இதுபோன்று எந்த நாட்டின் இராஜதந்திரியும் செய்யக்கூடாது எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கருத்தை எதிர்க்கட்சியினர் விவாதிக்க, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அரசு அனைத்து நாடுகளுடனும் சமச்சீரான உறவுகளை பேணும் என வலியுறுத்தினர்.