இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அட்டூழியம்!

வடக்குக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளால், மயிலிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவர்களின் வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் மீன்பிடிப் படகுகளாலேயே இந்த அழிவுகள் சம்பவித்துள்ளன.

கீரிமலைக்கும் மாதகலுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பிலேயே இந்த அழிவுகள் சம்பவித்துள்ளன என்று பருத்தித்துறை மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடமும், திணைக்களங்களிலும் முறைப்பாடுகள் வழங்கப்பட் டுள்ளன.

இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறலை தடுத்து நிறுத்தியுள்ளதாக இலங்கை கடற்படையினரும், கடற்றொழில் அமைச்சரும் அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலேயே, இந்திய இழுவைப் படகுகள் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.