2024 ஆம் ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் 554 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 72மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை தடுப்பதற்காக நாம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையில் இந்த ஆண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது 554 பேரை எல்லை தாண்டிய குற்றத்துக்காக கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்காக கையளித்துள்ளோம்.அதேபோன்று, எல்லைதாண்டிய மற்றும் சட்டவிரோதமான மீன்பிடி முறைமைகளைக் கொண்ட 72 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளோம்.
இலங்கையின் கடற்பரப்பினையும், வளங்களையும், மீனவர்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது. அந்த அடிப்படையில் தான் நாம் அத்துமீறி எல்லை தாண்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். விசேடமாக, அத்துமீறும் இந்திய மீனவர்கள் குறித்து நாம் உயிர்ச் சேதங்கள் இடம்பெறாத வகையில் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
எனினும், எல்லை தாண்டுபவர்கள் மீது தொடர்ந்தும் நாம் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். குறிப்பாக கைது நடவடிக்கைகள், படகுகளை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு உள்நாட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை ஒப்படைப்போம்.
ஆகவே, இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை கைவிடுவதோடு அத்துமீறி இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுகின்றோம் என்றார்.