வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு

இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு-ஐ மற்றும் கிராம சக்தி தெற்கு-ஐஐ ஆகிய மூன்று வீட்டுத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2017 ஒக்டோபர் மற்றும் 2018 ஒக்டோபர் மாதங்களில் கையெழுத்திடப்பட்டன.

இந்த ஒப்பந்தங்களின்படி, இலங்கை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், சுயமாக வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு 500,000 இலங்கை ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கி வந்தது. கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் பின்னரான விலை உயர்வு, அத்துடன் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் காரணமாக, ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் வீடுகளைக் கட்டி முடிப்பதில் பயனாளிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கமைய, இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு வீட்டுக்கான நிதியுதவியை 1,000,000 இலங்கை ரூபாவாக இருமடங்காக அதிகரிக்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதியுதவியை அமுல்படுத்துவதற்கான இராஜதந்திர கடிதங்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுது லால் ஆகியோரால் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த மூன்று திட்டங்களின் கீழ் 1550-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அதிகரித்த நிதியுதவியால் பயனடையவுள்ளன.

இலங்கையில் மக்களின் அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் மக்கள் நலன்சார் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களில் ‘வீடமைப்பு’ முக்கிய இடம் வகிக்கின்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்தியாவின் பிரதான வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 50,000 வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நிதியுதவி அதிகரிக்கப்பட்ட 3 கிராம சக்தி திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கையில் இந்தத் துறையில் ஏனைய உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகின்றது.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் தலா 24 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்கும் நாடளாவிய மாதிரி கிராமத் திட்டம்; மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வரும் யாத்திரிகர்களுக்கான இடைத்தங்கல் விடுதிகள்; மற்றும் அனுராதபுரத்தில் அண்மையில் நிறைவடைந்த சோபித நஹிமிகம திட்டம் ஆகியவை இதில் அடங்கும். அத்துடன், தித்வா புயலைத் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் டொலர் புனரமைப்பு மற்றும் மீட்புப் பொதியின் கீழ், முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளைக் கட்டுவதற்கான உதவிகளும் முன்மொழியப்பட்டுள்ளன.