இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை, வெளிவிவகார அமைச்சர் , ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பேரிடர் மீட்புக்கான இந்தியாவின் விசேட பொதி தொடர்பிலும் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடினமான நிலையில் இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்மட்டக் குழுவுடன் நாட்டிற்கு வருகைதரவுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், தமிழ்த் தரப்பினரும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



