சுங்க திணைக்களத்துக்கு அதிக வருமானம் – சுங்க பேச்சாளர் தகவல்

அரசாங்கத்தால் சுங்க திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருந்த வருமான இலக்கை விட அதிக வருமானம் இவ்வாண்டில் பெறப்பட்டுள்ளது. இவ்வாண்டு இது வரையிலான காலப்பகுதியில் 2,491 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுங்க திணைக்கள பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தால் சுங்க திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருந்த வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபாவாகும். எனினும் இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 2491 பில்லியன் ரூபா வருமானத்தை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளது. வருமான இலக்கை தாண்டியுள்ள அதேவேளை, வருமான வளர்ச்சி வேகமும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 1,531 பில்லியன் ரூபா வருமான இலக்காகும். கடந்த ஆண்டு வருமான இலக்கை விட சுமார் 4 பில்லியன் ரூபா மாத்திரமே கூடுதல் வருமானமாகக் கிடைக்கப் பெற்றது. எனினும் இவ்வாண்டு மோட்டார் வாகன இறக்குமதி உள்ளிட்ட காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டே எமக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனவே வரி வருமானம் இழக்கப்படக் கூடிய காரணிகளை கண்டறிந்து அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதற்கமைய இலங்கையில் சுங்க வரலாற்றில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள அதிகூடிய வருமானமாக இவ்வாண்டு பெற்றுக் கொண்டுள்ள வருமானம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 1,535 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் அதுவே அதிகூடிய வருமானமாகக் காணப்பட்டது. எனினும் இம்முறை இந்த வருமானம் பாரியளவில் அதிகரித்துள்ளது என்றார்.