வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் இளவயதினர் என்று வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத்திட்டத்தின் பொறுப்பதிகாரி மருத்துவர் கு.சந்திரகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில் தற்போது 7 ஆயிரத்து 168 பேர் எய்ட்ஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்களில் எண்ணிக்கை 5 ஆயிரத்து 544 என்றவாறாகவும், பெண்களின் எண்ணிக்கை ஆயிரத்து 603 என்பதாகவும் அமைந்துள்ளது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 21 பேரும் எய்ட்ஸ் தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 43 பேர் எய்ட்ஸ் தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் சிகிச்சைக்கு உட்பட்டு வருகின்றனர். எய்ட்ஸ் தொற்றுக்கு உட்பட்டவர்களில் கணிசமானவர்கள் 15 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். வவுனியா மருத்துவமனையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புபிரிவில் பொதுமக்கள் தாமாக முன்வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியம் பாதுகாக்கப்படும் – என்றார்.



