வடக்கு கடற்பரப்பு ஊடாக இடம்பெறும் அத்துமீறல்கள் அதிகரிப்பு

இராமேஸ்வரத்திலிருந்து மன்னாருக்கு படகு மூலம் வந்த இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட நால்வரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மன்னாரைச் சேர்ந்த குறித்த வர்த்தகர், தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் தொடர்பான அச்சத்தில் படகு வழியாக இராமேஸ்வரத்திற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அவர், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
தம்மீதான வழக்குகள் தற்போது முடிவடைந்த நிலையில் அவர் தமிழகத்தில் இருந்து மீண்டும் மன்னாருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார்.

இராமேஸ்வரம் பகுதியில் இருந்து மன்னாருக்கு படகொன்றில் பயணித்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் வைத்துக் குறித்த வர்த்தகர் உட்பட நால்வரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வட பகுதி கடலில் நேற்றிரவு (02) முதல் இன்று (03) அதிகாலை வரை சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக 35 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, நடுக்கடலில் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை விரட்டியடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (02) 313ற்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் அனுமதி பெற்ற கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.  அதற்கமைய, கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடிபட்டிருந்த போது, கச்சதீவு கடல் பகுதியில் இருந்து சிறிய ரக ரோந்து படகுகளில் சென்ற இலங்கை கடற்படையினர் படகுகளை சுற்றி வளைத்து கடற்றொழிலாளர்களை அச்சுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, எல்லை தாண்டி கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக்கூறி, அவர்களை தொடர்ந்து கடற்றொழிலில் ஈடுபடவிடாது துப்பாக்கி முனையில் விரட்டியடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக, அச்சமடைந்த கடற்றொழிலாளர்கள் உடனடியாக மீன்பிடி வலைகளை வெட்டி வீசிவிட்டு இலங்கை கடற்படை பிடியில் இருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.  பின்னர், குறித்த கடற்றொழிலாளர்களில் ஒரு பகுதியினர் கைது நடவடிக்கைக்கு அஞ்சி, கரை திரும்பியுள்ளதாகவும் இதனால் தங்களுக்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.