கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகக் குறைவாகக் காணப்படுவதுடன், இடைவிலகல்களும் அதிகரித்துக் காணப்படுவதாக வலயக் கல்வித்திணைக்கள தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுங்கற்ற வரவுகள் மற்றும் இடைவிலகல் என்பன அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் அமைந்திருக்கின்ற பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகக் குறைவாக காணப்படுகின்றது.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட முதல் நிலை பாடசாலைகளான முருகானந்தா கல்லூரி, தருமபுரம் மத்திய கல்லூரி, பிரமந்தனாறு ஆகிய பாடசாலைகளிலும் ஏனைய ஆரம்ப இடைநிலை பாடசாலைகளிலும் மாணவர்களின் வரவு மிகக் குறைவாக காணப்படுவதுடன், இடைவிலகல்களும் அதிகளவிலே காணப்படுகின்றன என்றும் வலய கல்வி திணைக்கள தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
இதேவேளை இவ்வாறு இடைவிலகிய மாணவர்களை மீளக்கற்றலில் இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவர்களது தேவைகள் மற்றும் அவர்களது குடும்பத்தின் பொருளாதார நிலைமைகளை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் முதலில் உள்ளது.
அவ்வாறு நிறைவு செய்கின்ற போதுதான் குறித்த இடைவிலகல் மற்றும் ஒழுங்கற்ற வரவுகளை சீர்செய்யக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கிளி/சாந்தபுரம் பாடசாலையில் 55 இற்கு மேற்பட்ட மாணவர்கள் ஒழுங்கற்ற வரவுகளை கொண்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-