வனவளத் திணைக்களத்தால் வயல் காணிகள் அதிகரிப்பு!

வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பிரதேசத்தில் மக்களின் நெற்காணிகளை வனவளத்திணைக்களம் கைப்படுத்தியுள்ளதுடன் நெற்பயிரை சேதப்படுத்தி தேக்குமரம் நடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதாவது,

எமது பூர்வீகக் காணிகளில் விவசாயம் செய்துவந்த நாம், 1987ஆம் ஆண்டு போரால் இடம்பெயர்ந்தோம். 2012ஆம் ஆண்டு மீளக்குடியமாந்த பின்னர் எமது காணிகளில் நெற்செய்கை மேற்கொண்டு வருகின்றோம். தற்போது எமது காணிகளை கையப்படுத்தும் நடவடிக்கைகளை வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர். அங்கு விதைக்கப்பட்டுள்ள பயிர்களை அழித்து தேக்கு மரம் நடும் நடவடிக்கைளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உழவு இயந்திரங்களை விவசாய பயிர்களுக்கு மேலாக ஓட்டிச்சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காணிகளைப் பதிவுசெய்ததற்கான ஆவணம் எங்களிடம் இருக்கிறது . வனவளத் திணைக்களத்தின் இந்த நடவடிக்கையை தடுத்து எமது பூர்வீகக் காணிகளை மீட்டுத்தரவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுகின்றோம் – என்றனர்.