இலங்கையில் வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் பாதீடு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்றைய தினம் (20) உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தினமும் சுமார் 25 சைபர் கிரைம் (Cyber crime) முறைப்பாடுகள் பதிவாகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன. வழங்கப்பட்ட தரவுகள் வடமாகாணத்தில் கூர்மையான அதிகரிப்பைக் காட்டுகின்றன.
2020ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 24 சைபர் குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், அதைத் தொடர்ந்து 2021இல் 577 சம்பவங்களும், 2022இல் 654 சம்பவங்களும், 2023இல் 472 சம்பவங்களும், 2024இல் 1,539 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் 2025ஆம் ஆண்டில் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,368 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்றப் புலனாய்வு துணைப் பிரிவுகள் நிறுவப்பட்டிருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.



