இலங்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாக ஐஎம்எப் உறுதி

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியம் தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உறுதியளித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாட்டின் (World Economic Forum) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பிலேயே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

மேலும்,  அண்மையில் ஏற்பட்ட  தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு மத்தியில் இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மன உறுதியைப் பாராட்டிய அவர், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியம் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தித்வா  சூறாவளியால் இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறைக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் (நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4%) நேரடி சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியை (Rapid Financing Instrument – RFI) வழங்க அனுமதி அளித்துள்ளது.

சூறாவளியால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளை விரிவாக மதிப்பிடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் விசேட குழு ஒன்று நாளை வியாழக்கிழமை  22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் குழுவின் தலைவர் மசாடோ காண்டாவுடன் பிரதமர் அமரசூரிய கலந்துரையாடினார்.

இதன்போது,  நாட்டின் தற்போதைய மறுசீரமைப்பு பணிகள், பொருளாதார நிலைமை தொடர்பில் உயர்மட்டக் கூட்டத்தின் போது கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.

2026 உலகப் பொருளாதார மாநாடு “Spirit of Dialogue” (உரையாடல் உணர்வு) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. இதில் 3,000-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.