இலங்கைக்கான அடுத்த கட்ட கடனுதவி குறித்து IMF ஆராய்வு

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் ஐந்தாவது மதிப்பாய்வை இறுதி செய்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு, எதிர்வரும் வாரங்களில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் போது இலங்கைக்கு 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கான தீர்மானம் எட்டப்படவுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்ட, நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசாக் (julie kozack) , 2025, ஒக்டோபர் 9 அன்று, சர்வதேச நாணய நிதிய பணியாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே பணியாளர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், நிர்வாக சபையால் மதிப்பாய்வு அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும்.

இதற்கான கூட்டம் வரும் வாரங்களில் நடைபெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கோசாக் கூறியுள்ளார்.
இலங்கையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட பாதீட்டில், 2026 ஆம் ஆண்டிற்கான 7% வளர்ச்சி இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

இது, சர்வதேச நாணய நிதிய, நிரல் அளவுருக்களுடன் ஒத்துப்போகிறதா என்பதைத் தீர்மானிக்க நிதியம் தற்போது மதிப்பாய்வு செய்து வருவதாகக் கோசாக் குறிப்பிட்டுள்ளார்.