இலங்கைக்கான அடுத்தக்கட்ட கடன் தவணை தொடர்பில் IMF கவனம்

இலங்கைக்கு அடுத்தக்கட்ட கடன் தவணைக் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக ஆராயும் பொருட்டு, எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூடவுள்ளது.

வொசிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் கடந்த 22 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அதன் பேச்சாளர் ஜுலி கொசாக் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு குழு, கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி பணிக்குழாம் மட்ட இணக்கப்பாட்டை எட்டியது. இதன்போது குறிப்பாக கிரய மீட்பு மின்கட்டண சீராக்கல் மற்றும் சுயமாக நடைமுறையாகும் மின்கட்டண முறைமை ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தவிடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தின் அடிப்படையில், எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூடி இலங்கைக்கான அடுத்தத் தவணைக் கொடுப்பனவு குறித்து தீர்மானிக்கும். இதில் இணக்கப்பாடு காணப்பட்டு, இலங்கைக்கான கடன் தொகை அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இலங்கை உடனடியாக 344 மில்லியன் அமெரிக்க டொலரை பெறும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.