இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அதிகார சபையினால் மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையொன்றில் இந்து கடவுள்களின் உருவப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டதை அடுத்து சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கையின் மன்னார் தீவையும், இந்தியாவின் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை இராமாயணத்துடன் தொடர்பு படுத்துவது குறித்து இந்த காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்கள் உள்ளன.
இலங்கையின் மன்னார் தீவுக்கும் இந்தியாவின் இராமேஸ்வரம் தீவுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் தொடர்ச்சியாக மணல் திட்டுகள் உள்ளன. இதனை இந்துக்களில் ஒரு தரப்பினர் ராமர் பாலம் என அழைக்கின்றனர். ஆதாமின் பாலம் எனவும் சிலர் இதனை குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த அறிவிப்புப் பலகையில் ராமர், ஹனுமான் ஆகியோரின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா அதிகார சபையின் வட மாகாண அலுவலகத்தினால் இந்த அறிவிப்புப் பலகை சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவமும் சூழல் முக்கியத்துவமும் கொண்ட இடமாகக் கருதப்படுகிறது.
ராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்தி வந்ததன் பின்னர், இலங்கைக்கு வந்த சீதையை மீட்பதற்காக ராமர் தலைமையிலான படையினர் செல்வதற்காக அனுமன் ஒரு பாலத்தை அமைத்ததாக ராமாயணம் கூறுகிறது. இந்த மணல் திட்டுக்களே அந்தப் பாலம் என இந்துக்களில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
ஆனால், இதனை ஆதாமின் பாலம் என்றே சில தரப்பினர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், இந்து சமயக் கடவுள்களின் படங்களைத் தாங்கியுள்ள இந்த அறிவிப்புப் பலகை மன்னாரின் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கிறது, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் இதனை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் மன்னாரைச் சேர்ந்த கிறிஸ்தவ மத குருமார்கள் கோரியுள்ளனர்.
இந்த நிலையில்,மன்னார் நகர நுழைவாயிலில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையை அகற்றக்கூடாது என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் இந்த பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.




