சட்டவிராேதமான முறையில் வெளிநாட்டு தொழிலுக்கு வருபவர்களை பாதுகாப்பு இல்லங்களுக்கு எடுப்பதில்லை – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாட்டு தொழிலுக்கு சென்று, அங்கு பிரச்சிகளை எதிர்கொண்டு தூதுரகத்துக்கு வரும் பெண்களை எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுமதிப்பதில்லை என பணியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக வெளிநாட்டு தூதரகங்களின் தொழிலாளர் நலன்புரி பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதன் மூலம் வெளிநாட்டில் பணிபுரியும் போது தமக்குத் தேவையான பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக தூதரகங்களுக்கு வரும் பெண்களுக்குத் தேவையான நலன்புரி வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

இந்த பாதுகாப்பு இல்லம் சட்டப்பூர்வமான முறையில்  வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களுக்காக மாத்திரமே ஸ்தாபிக்கப்பட்டதாகும்.

என்றாலும் பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடு சென்ற பெண்களுக்கு தேவையான அனைத்து நலன்புரி வசதிகளையும் வழங்குவதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுத்திருந்தோம்.

என்றாலும் பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு வரும்போது, பல்வேறு மோதல் நிலைமைகளை ஏற்படுத்திக்கொள்வதுடன்  அந்த மோதல்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் உதவியை நாட வேண்டிய சம்பவங்களும் கடந்த தினங்களில் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் பல்வேறு சட்டவிராேதமான வழிகளில் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு சேவை நிலையங்களில் பிரச்சினைகளுக்கு ஆளாகி தூதரகங்களுக்கு வரும் பெண்களை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதிக்கு பின்னர் பாதுகாப்பு இல்லங்களுக்கு பொறுப்பேற்பதை நிறுத்துவதற்கு பணியகம் தீர்மானித்திருக்கிறது.

விசேடமாக சட்ட ரீதியான வழிகளில் பெண்கள் வெளிநாடு தொழிலுக்கு செல்வதை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு தரகர்கள் மற்றும் சட்டவிராேத வெளிநாட்டு தொழில் முகவர் நிறுவனங்களின் தலையீட்டின் மூலம் பெண்கள் வெநாட்டு தொழிலுக்கு செல்வதை கட்டுப்படுத்துவதற்குமே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.