வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் காவல்துறையினரால் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றபோதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை ,சட்டவிரோத மணல் அகழ்வு ,கசிப்பு உற்பத்தி ,கால்நடை கடத்தல் ,கோஷ்டி போதல் போன்றவை அதிகரித்துள்ளன. இவை தொடர்பாக முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்கள் பொலி சாருக்கு வழங்கப்பட்டாலும் சில வேளைகளில் அசமந்த போக்குடன் பொலிசார் நடந்துகொள்கின்றமையால் இவற்ரை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுட்டி காட்டியுள்ளார்கள்
யாழ்ப்பாண மாவட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவிக்கும்போது,
போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி என்பன இடம்பெறுவதாகவும் கால்நடைகள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு மண்டைத்தீவு சந்தி மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி ஆகிய இடங்களில் காவல் காவலரணங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒலிபெருக்கி பாவனைக்கான கட்டணம் பொலிஸார் அறவிடுகின்றமையால் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும்போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பும் காவல்துறையினருக்கு உள்ளது என தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில், பெண் காவல்துறையினரின் பற்றாக்குறை, சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி தொடர்பான பிணக்குகளில் பிரதேச செயலர்களுடன் இணைந்து செயற்பட காவல்துறையினர் தவறுகின்றமை ஆகிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு விற்பனை மிகப் பிரதான பிரச்சினையாக உள்ளதாகவும் அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபடும் குடும்பங்கள் தொடர்பான விவரங்களை திரட்டியுள்ளபோதிலும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவுதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் மற்றும் கால்நடைகள் கடத்தல் என்பனவும் நடைபெறுவதாகச் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும் கல்லாறை அண்மித்து காட்டை அழித்து மணல் அகழ்வு நடைபெறுகின்றது எனத் தெரிவித்தார்.
அங்கு அகழப்படும் மண்ணை விற்பனைக்காக சேகரித்து வைக்கும் இடத்துக்கு கொண்டு வரப்படும் பாதையில் பொலிஸ் காவலரண் அமைப்பதன் ஊடாக இதனைத் தடுக்கலாம் கௌதாரிமுனை கடற்கரைக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு இளையோர் வருவதாகவும் அங்கு மதுபானம் அருந்தி விட்டு முரண்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டதுடன் பொலிஸ் காவலரண் அங்கு அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், பாடசாலை மாணவர்களுக்கு பச்சைகுத்தும் நிலையங்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார். இவ்வாறாக மாடவட்ட ரிதியாக குற்ரச்சாட்டுகள் முன்வைத்தனர்.