தமிழ்த் தேசியப் பேரவையை உள்ளூராட்சிப்படுத்தி இறைமையின் இருப்பை மீளுறுதிப்படுத்துக | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 336

உள்ளூராட்சி என்பது மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் என்னும் மக்களால் சனநாயகத் தேர்தல் வழியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் வழியாக மக்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு உரிய நாட்டின் சட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கும் அமையத் தங்களின் நாளாந்த வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான ஆட்சி முறைமை.
மாநகரசபைகளில் நகரசபைகளில் பிரதேச சபைகளில் வாழும் ஒவ்வொருவரும் தங்களால் ஏற்படுத்தப்படும் இந்த உள்ளூராட்சி முறைமை தங்களை தாங்களே ஆளும் வலிமையுடையதாக தங்களால் ஏற்படுத்தப்பட்டாலே தங்களுக்கான பாதுகாப்பான அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் தரும் என்பதை மனதிலிருத்தி தமிழரல்லாதவர் தமிழர்களின் உள்ளூராட்சியை நிர்ணயிக்க விடாது தமிழுணர்வுடன் வாக்களிக்க வேண்டுமென இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண மாநகரசபையுடன் மூன்று நகரசபைகளும் 13 பிரதேச சபைகளும் உள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகள் உள்ளன. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபையுடன் நான்கு பிரதேச சபைகள் உள்ளன. வவுனியா மாவட்டத்தில் வவுனியா மாநகரசபையுடன் நான்கு பிரதேச சபைகள் உள்ளன. இதில் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையும் அடங்கும். முல்லைத்தீவில் நான்கு பிரதேச சபைகள் உள. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநரசபையுடன் இரண்டு நகரசபைகள் ஒன்பது பிரதேச சபைகள் உள. திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மாநகரசபையும் ஒரு நகரசபையும் பதினொரு பிரதேச சபைகளும் உள்ளன. இவையே  தமிழர்களின் உள்ளூராட்சிக்கு உரியதாக உள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் இரண்டு மாநகரசபைகளும் ஒரு நகரசபையும் 17 பிரதேச சபைகளும் உள. ஆனால் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், பிரதேச சபை காரைதீவுப் பிரதேச சபை என்பன மட்டுமே இன்று தமிழர்களின் வாக்குகளால் தமிழர் உள்ளூராட்சிப் பகிர்வாவது பெறக்கூடிய நிலை உள்ளது.  மிகுதி அனைத்தும் தமிழரல்லாதவர்களின் வாக்குகளாலேயே ஆட்சி பெறும் நிலை உள்ளது. ஈழத்தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பில் மிகப்பெரிய மாவட்ட  விவசாய நிலமான பட்டிப்பளை ஆற்று வள நிலம் அம்பாறை இன்று தமிழரல்லாதவர்களின் சொத்தாகிவிட்டது. இத்தகைய நிலை மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிகரித்துச் செல்லும் நிலையிலேயே இனியாவது ஈழத்தமிழரின் வரலாற்றுத் தாயகமாக உள்ள நிலப்பரப்பில் நில வளம் கடல் வளம் மிக்க எஞ்சியுள்ள நிலத்தின் கடலின் உள்ளூராட்சியைத் தமிழரல்லாவர்களுக்கு போக 2025 உள்ளூராட்சித் தேர்தலில் அனுமதிக்காதீர்கள் என்று இலக்கு பணிவாக வேண்டிநிற்கிறது.
இந்த நிலை மீதமாய் உள்ள தமிழர் தாயக நில கடல் பகுதிகளுக்கும் வராது தடுப்பதற்காகவே 2025ம் ஆண்டு மேமாதம் 6ம் நாள் நடக்கும் சிறிலங்காவின் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய பேரவையாக ஈழத்தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் இலங்கையில் முதன் முதலில் தோன்றிய ஈழத்தமிழரின் பாராளுமன்ற அரசியல் கட்சியாகப் பதிவுள்ள எண்பது ஆண்டு வரலாறு உடைய தமிழ்க்காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றன. எனவே ஈழத்தமிழரின் சொந்த மண் இந்த மண் என்னும் அவர்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மண்ணின் மீதான இறைமையின் இருப்பை மீளுறுதி செய்திட தமிழ் தேசிய பேரவையின் வெற்றிக்குச் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி இலக்கு வாக்களிக்க உரிமையுள்ள அத்தனை ஈழத்தமிழர்களையும் இவ்வாரத்தில் அழைக்கின்றது.
மேலும்  அமெரிக்க அரசத் தலைவர் ட்ரம்பின் வர்த்தகப் போரிலான பேச்சுக்களில் அமெரிக்காவுக்கான சிறப்பான ஒன்றை அளிக்கும்படி அவர் கேட்பதற்குச் சிறிலங்கா  ஈழத்தமிழரின் நில கடல் வளத்தையும் ஈழத்தமிழரின் மண்வளத்தையும் தான்   பேரப்பொருளாக்கும் என்னும் அபாயம் உள்ளது. இந்நிலையில் நிலம் நீர் மனித வலு மீதான உள்ளூராட்சி அதிகாரத்தை ஈழத்தமிழர்கள் தமதாக வெளிப்படுத்தினாலேயே  அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் பெறலாம் என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழரும் மனதிருத்தி மே 6ம் நாள் தேர்தலை இதற்கான களமாக முன்னெடுக்க இலக்கு வேண்டுகிறது.  கூடவே ஈழத்தமிழர்களின் மாநகரசபைகளை நகரசபைகளை பிரதேச சபைகளை இங்கு பட்டியிலிட்டதற்குக் காரணம் இவற்றில் உள்ள மூலவளங்களை மனிதவளத்தை மூலதனப் பலத்தை குறித்த பொருளாதாரக் கட்டமைப்பு தொகுப்பு செய்யப்பட்டாலே ஈழத்தமிழரின் உள்ளூராட்சிக்கு உரியன இவை என உலகம் உணர்ந்து ஈழத்தமிழர்களுடன் வர்த்தக் தொடர்புகளை உருவாக்க முயலும். உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் இந்த முயற்சிக்கான இணைப்பை ஏற்படுத்தும் பாலங்களாக விளங்க வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினைக்கு உலக ஆதரவை உருவாக்கலாம் என்பது இலக்கின் கருத்து.
1972 மே 22 இல் சிறிமாவோ தலைமையிலான இடதுசாரிக் கூட்டு சுதந்திரக்கட்சி  ஈழத்தமிழர்களை நாடற்ற தேச இனமாக மாற்றியது போல இந்த 2025  மே 6 இல் இடதுசாரி பூச்சுத் தேசிய மக்கள் சக்தி இந்தியக் கூட்டாண்மையுடன் இணைந்து ஈழத்தமிழர்  தேச இனமல்ல சிறிலங்காவின் வடக்கின் சமுகத்தினர் கிழக்கின் சமுகத்தினர் என ஈழத்தமிழரின் இருப்பின் இறைமையை ஒடுக்க முயல்வதை ஈழத்தமிழர் வாக்குப்பலத்தால்  தேசிய மக்கள் சத்திக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கூட்டாண்மையை பங்காண்மையை முறியடித்த தமிழரசுக்கட்சிக்கும்  உள்ளூராட்சி தேர்தலில் ஏற்படுத்தக் கூடிய தோல்வியே ஈழத்தமிழரின் இறைமையை மீளுறுதிப்படுத்தும் என்பது இலக்கின் ஆணித்தரமான எண்ணம்.
அவ்வாறே இந்தியாவின் குட்டிச் சுவிட்சலாந்து என்று உல்லாசப்பயணிகளுக்கு மகிழ்வளித்த ஜம்மு கஷ்மீரின் பைசர்ன் பள்ளத்தாக்கின் பஹல்காமில் உல்லாசப்பயணிகள் மீது பாக்கிஸ்தானில் இயங்கும் லஷ்கார்  இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ரெசிஸ்டன்ட் புரண்ட் நடாத்திய தாக்குதல் என இந்தியா சொல்லும் தாக்குதலில் இரு வெளிநாட்டவர் உட்பட 26 பேர் உயிரிழந்து பலர் காயப்பட்ட கடந்த வார  நிகழ்வு இந்தோ-பாக்கிஸ்தான் யுத்தத்தை தொடங்கக் கூடியதாக மாறியுள்ளது. சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுரகுமரர திசநாயக்கா இந்தியப் பிரதமர் உடன் பதினைந்து நிமிடங்கள் அலைபேசியில் உரையாடி இந்தியாவுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் சிறிலங்கா அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் இந்தியாவுக்கான தனது ஆதரவு நிலையை மட்டுமல்ல சிறிலங்கா இத்தகைய பயங்கரவாதத்தைத்தான் 30 ஆண்டுகள் அனுபவித்தது என ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கைங்கரியத்தையும் செய்துள்ளார். இவ்வாறு சிங்களத்தலைமைகள் எல்லாம் இந்தியாவுடன் நட்புறவுப் பெருக்கில் இருக்கையில் இந்தோ பாக்கிஸ்தான் யுத்தம் தொடங்குமானால் ஈழத்தமிழரின் நாளாந்த பாதுகாப்பு பலத்த தாக்கங்களை அனுபவிக்கக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். இதனை எதிரிகொள்ள ஈழத்தமிழர்களின் தேசிய பேரவை மேலும் பலம் பெற்று இந்தியத்துணைக்கண்டத்தில் ஏற்படக் கூடிய புதிய சூழ்நிலைகளுக்கு ஈழத்தமிழர்கள் முகங்கொடுக்க வல்ல ஆபத்து முகாமைத்துவத்தால் உயிர் வாழக்கூடியதாகி பசி பட்டினி மருந்து தட்டுப்பாடுகள் ஏற்படாமலும்   நாளாந்த அடிப்படைத் தேவைகள் கிடைக்கவும் செயற்திட்டங்களை உருவாக்க வேண்டுமென இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது. இதற்கு உள்ளூராட்சி தேர்தலில் கட்டமைந்துள்ள இந்தத் தமிழ் தேசிய பேரவை ஈழத்தமிழர்களின் சிவில் சமுக அமைப்புக்களை இணைக்கும் பாலமாக வளர்ச்சியடைந்து பலமான தமிழ்த் தேசிய பேரவையாக மாற இலக்கு வாழ்த்துகிறது.
ஆசிரியர்