ஈழத்தமிழர் இறைமையைக் காக்க ஒரே வழி தான் உண்டு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 333

பாரத் சிறிலங்கா கூட்டாண்மை மூலமான இலங்கைத் தீவிலான பங்காண்மை திட்டங்களின் வழி ஈழத்தமிழரின் இறைமையுள்ள தாயக நிலப்பரப்புக்கள் இந்திய பொருளாதார ஒன்றியத்துள் உள்ளடக்கப்பட்டு வருவது 2009ம் ஆண்டுக்குப் பின்னரான ஈழத்தமிழர் வரலாறாக உள்ளது. இதனை ஈழத்தமிழர்கள் அறிவியல் அணுகுமுறையில் வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளதென்பது இலக்கின் கருத்தாக உள்ளது.
யாழ்ப்பாண அரசின் இறைமையுள்ள நிலப்பரப்பில் ஏற்கனவே யாழ்ப்பாண, கிளிநொச்சி, மாவட்டங்களும் வன்னி அரசின் இறைமையுள்ள நிலப்பரப்பில் வவனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மாவட்டங்களும் நிலம் கடல் வான் பரப்புக்கள் முழுதும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைத் தீவுக்கான முதல் மூன்று வருகைகள் மூலம் இந்தியப் பொருளாதார ஒன்றியத்துள் உள்ளடக்கப்பட்டு விட்டன. தற்போதைய நான்காவது வருகை எஞ்சியுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தை அதன் பால்வளப் பயிர் வளத்திட்டங்களுக்கான வளர்ச்சிக்கான இந்திய உதவி மூலம் உள்வாங்கப்படவுள்ளது என்பது இலக்கின் கணிப்பாக உள்ளது. இந்தியா 2015 இல் 2.1 ட்ரில்லியன் டொலர்களாக இருந்த தனது பொருளாதாரத்தை 2025இல் 4.3 ட்ரில்லியன் டொலர்களாக உயர்த்த எடுக்கும் முயற்சிகளில் ஈழத்தமிழர் தாயகப் பகுதிகள் இந்தியாவின் சொந்த நிலம் போன்றே உள்வாங்கப்படும் நிலை வரலாம். இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தங்கள் நிலங்களை அனைத்து உலகிலும் உள்ள ஈழத்தமிழர்களுடன் இணைந்து உற்பத்திக்குள் கொண்டு வராவிட்டால் ஈழத்தமிழரின் நில இழப்பு அவர்களின் இருப்பு இழப்பாக மாறும் பேரபாயம் உள்ளதென்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
அத்துடன் இந்தியத்தூதர் சந்தோஸ் ராஜ் வீரகேசரிக்கு இந்தியப் பிரதமரின் 4வது வருகை குறித்து அளித்த செவ்வியில் இந்தியப் பிரதமரின் இந்தப் பயணம் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்ச்சியான உயர்மட்ட ஈடுபாட்டின் ஒரு பகுதியெனவும், இது இந்தியாவும் சிறிலங்காவும் மிகவும் நெருங்கிய அயல்நாடுகள் என்பதனை வெளிப்படுத்துவதாகவும், இருநாடுகளினதும் ஒத்துழைப்பின் தற்போதைய பகுதிகளை மேம்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், இருநாடுகளும் அடையும் நன்மைகளின் கூட்டாண்மையின் புதிய பகுதிகளை ஆராயவும் உள்ளதெனவும் வருகையின் நோக்கை இந்தியத்தூதுவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் இந்தியா சிறிலங்காவின் பாதுகாப்புக்கும் பாதுகாவலுக்கும் அளிக்கும் படைப் பயிற்சிகள் குறித்து இச்செவ்வியில் விளக்கியுள்ளமை இந்தியா சிறிலங்காவின் இறைமைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தன்னை முதன்மைப் பாதுகாவலனாக 1987 ம் ஆண்டின் ராஜீவ்காந்தி-ஜே.ஆர் ஜயவர்த்தன இந்திய இலங்கை ஒப்பந்தம் முதல் இன்று வரை முதன்மைப்படுத்துவதை மீண்டும் உறுதி செய்துள்ளது. இவ்விடத்தில் இந்தியத்தூதுவர் சிறிலங்காவின் கடல் வழியில் மிகவும் நெருங்கிய அயல்நாடாகச் சிறிலங்கா இருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறுதித்தன்மைக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் தனது ஆட்புல எல்லையினை சிறிலங்கா அனுமதிக்காது என்ற சிறிலங்கா அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்க இந்தியாவுக்கு அளித்துள்ள வாக்குறுதியையும் மீள்நினைவுபடுத்தியுள்ளார். இதன்வழி பாரத் சிறிலங்கா கூட்டாண்மை என்பது இன்றைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் தொடரப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளதென்பன்பதை இந்தியத்தூதுவர் கூறாமல் கூறியுள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பிசம் அமெரிக்காவை முதன்மைப்படுத்தி அனைத்துலகச் சட்டங்கள் ஒழுங்குகள் வழமைகள் எல்லாவற்றையுமே அரசத்தலைவரின் அதி உச்ச ஆணையின் மூலம் தூக்கியெறிந்து அரசத் தலைவர் தான் நினைத்ததை நிறைவேற்றும் புதிய அரசியல் கலாச்சாரத்தை வேகப்படுத்தி வருகிறது. இதனால் வரலாற்றுப் பகைமையுடன் இருந்த நாடுகள் கூட தங்கள் பாதுகாப்புக்காக ஒன்று சேருகின்ற அரசியல் வேகம் பெறுகிறது. யப்பான் சீனாவுடன் தென்கொரியாவையும் இணைத்து முக்கோணப்பட்ட பொருளாதார ஒன்றியம் ஒன்றை முன்னெடுக்க முயற்சிப்பது இதற்குச்சிறந்த உதாரணம். இதே நோக்கில் சீன இந்திய உறவுகளில் ஏற்பட்டு வரும் நட்புப்போக்குகளின் பின்னணயில் “குளோபல் சவுத்” (தெற்கு உலகம்) என்னும் இந்திய முயற்சிக்கு சீனா தன் எதிர்ப்பைக் கைவிட்டுள்ளமையையும் இந்தியா எல்லைப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்காது சீனாவுடன் நட்புப் பாராட்ட முனைவதையும் கடந்த வார அரசியல் தெளிவாக்கியுள்ளது.
இந்த சீன இந்திய உறவுக்கு இருதரப்பிலும் இணைப்பு செய்யும் ஆற்றல் சிறிலங்காவுக்கு இருப்பதால் சீன இந்திய சிறிலங்கா முக்கோண வலயம் ஒன்று கட்டமைக்கப்படக்கூடிய நிலையிருப்பதால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நட்பாளராகச் சிறிலங்கா தன்னை வெளிப்படுத்தக் கூடும். இதனால் இந்தியப் பிரதமரின் 4வது வருகை இந்தியா சிறிலங்காவில் சீனாவுடன் பொருளாதாரத்தில் இணைந்து பணியாற்றக்கூடிய தளங்களை உருவாக்கும். இந்தத் தளங்கள் பெரும்பாலும் கிழக்கிலும் வடக்கிலும் கட்டியெழுப்பப்பட உள்ளதால் இவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சியாக இந்தியாவே இந்துக்களும் பௌத்தர்களும் இணைந்த முன்னேற்றம் என்ற வகையில் பௌத்தத்தை சிறிலங்கா வளர்க்க மேலும் முயற்சிக்கும். இதற்கு உதாரணமாக பாளி மொழிக்கு இந்தியா செம் மொழித் தகுதி வழங்கியது மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு 5000 சூரிய மின்கலங்கள் பொருத்துவது, பாளி இலக்கண நூலான நாம மாலாவை இலவசமாக மறுபதிப்பு செய்து கொடுப்பது என்பன அமைகின்றன. அவ்வாறே ஈழத்தமிழர்கள் இந்தியப் பண்பாட்டுக்கே உரியவர்கள் என வலியுறுத்த திருவள்ளுவர் சிலைகளை யாழ்ப்பாணத்திலும் ஒக்ஸ்வேட்டிலும் இந்தியா நிறுவுகிறது.
இத்தகைய நிலையில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையை சிறிலங்காவின் வடக்கின் பிரச்சினை கிழக்கின் பிரச்சினை எனச் சிறிலங்காவும் இந்தியாவும் இணைந்து திசை மாற்றம் செய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் பலமாக உள்ளன. இதனை எதிர்கொள்ள ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது அவர்களின் இறைமையை இலங்கைத்தீவில் காப்பதும் அவர்களின் யாராலும் பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளை மீள் உறுதிப்படுத்தலும் என்பதாகவே உள்ளது. இதனை இன்று உலகநாடுகளுக்கும் உலக அமைப்புக்களுக்கும் உலக மக்களுக்கும் ‘இலக்கு’ மீள் நினைவுறுத்த வேண்டியுள்ளது. இதுவே ஈழத்தமிழரின் இறைமையைக் காக்க ஒரே வழியாகும் என்பது இலக்கின் உறுதியான எண்ணம்.

ஆசிரியர்

Tamil News