ஈழத்தமிழர் இறைமைக்கு எதிரான சிங்கள இறைமையின் எழுச்சி | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 313

சிறிலங்காவின் பத்தாவது நாடாளுமன்ற ஆட்சி 21.11.2024 இல் தேசிய மக்கள் சக்தியினர் எந்த சட்டவாக்கத்தையும் செய்யக்கூடியதாக, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தெளிவாகச் சொன்னால் எந்த ஜே.வி.பி 1969 முதல் 2024வரை 55 ஆண்டுகள் ஈழத்தமிழரின் இறைமை ஒடுக்கத்துக்கும் தேசிய நீக்கத்துக்கும் ஈழத்தமிழின அழிப்புக்கும் ஆட்சியில் இருந்த சிங்கள அரசாங்களுக்குப் பக்கத்துணையாக இருந்ததோ அந்த ஜே.வி .பி இன்று சிங்கள தேசிய மக்கள் சக்தியாக நேரடியாகத் தனது ஆட்சியைத் தொடங்குகிறது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 80830 வாக்குகளும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 39894 வாக்குகளும் கிடைத்து தேசிய மக்கள் சக்தி தமிழர்களாலும் ஏற்கப்படுகிறது என்ற கருத்துருவாக்கத்தை உலகுக்கு அளித்துள்ளது. இணக்கப்பாட்டு அரசியல் பேசியும் கணக்குக் கேட்டல் உத்தியை முன்னெடுத்தும் தமிழ்த் தேசிய வாக்குகளைச் சிதறுண்டு போகச் செய்து ஒவ்வொருவரும் ஈழத்தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தி வெல்ல அறிந்தோ அறியாமாலோ உதவியுள்ளனர். இதனால் பாரம்பரியமான தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கி 2020 இல் 112967 இல் இருந்து 2024 இல் 63327 ஆகவும் தமிழ்க் காங்கிரசின் வாக்கு வங்கி 2020 இல் 55303 ஆக இருந்து 27986 ஆகவும் இரண்டு கட்சிக்கும் அரைவாசியாக வாக்கினை வீழ்ச்சி அடையவைத்தது. அது மட்டுமல்லாமல் சங்குச்சின்னத்தில் போட்டியிட்ட சனநாயகக் தமிழர் கூட்டணிக்கு 22513 வாக்குகள் மட்டும் கிடைக்கவும், செல்வம் அடைக்கலநாதன் மட்டும் 25 ஆண்டுகளைத் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் மீளவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வைத்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணிக்கு 2020 இல் இருந்த 35927 வாக்குகளை 2024 இல் 13295 ஆக வீழ்ச்சி அடைய வைத்து பிரதிநிதித்துவ இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இழப்புக்கள் ஈழத்தமிழர் இறைமை நீக்கமும் தேசிய நீக்கமும் நிறைவு அடையவைக்கக் கூடிய முறையில், ஏக்கிய இராஜ்ஜியம் என்கிற ஒரு நாடு ஒரு ஆட்சி முறைமையை அநுர ஆட்சியாக வெளிப்பட வைக்கும் என்பது பலரது கருத்தாகவும் உள்ளது. இதன்வழி ஈழத்தமிழர்களும் அவ்வரசின் சமுகங்களில் (Community) ஒன்று என ஏற்கின்றனர் எனச் சிங்கள ஆட்சியாளர் உலகுக்குப் பரப்புரை செய்ய உதவக்கூடிய வகையில் யாழ்ப்பாண வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகள் அமைந்துள்ளன.
இந்நிலை ஈழத்தமிழர்கள் தங்களுக்குத் தாங்களே சிறுபான்மையினர் எனச் செய்த வரைவிலக்கணத்தையும் அதன் வழி இதுகால வரை அவர்கள் பெற முயன்ற பாதுகாப்புக்களையும் கூட இனிப் பெற முடியாது மாற்றும். மேலும் உள்ளக பொறிமுறையுள் அனைத்தையும் கேட்க வேண்டிய இரண்டாந்தர மக்களாகச் செய்துவிடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தமிழர் தங்களது வெளியகத் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி அனைத்துலக நாடுகள் அமைப்புக்களிடம் தங்களுக்கு அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப எந்த உதவியையும் பெற இயலாத நிலையையும் உருவாக்கிவிடும்.
இவை எல்லாமே ஒரு அணியில் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை, “அது இறைமையை மீள நிலைப்படுத்தலே” என்ற உண்மையை உரக்கச் சொல்ல ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மறுப்பதன் விளைவு என்பதே இலக்கின் உறுதியான எண்ணமாக உள்ளது. எது பேசப்பட வேண்டுமோ அது பேசப்படாததினால் சமுக உளவியல் உறுதியற்றதாக உள்ளது. எது செயற்படுத்தப்பட வேண்டுமோ அது செயற்படுத்தப்படாது உள்ளதால் ஈழத்தமிழ் மக்களிடை நம்பிக்கை வரட்சியும் பொருளாதார வெறுமையும் தமிழரல்லாத தமிழினப் பகைமைகளிடம் கூடத் தலைமைகளைத் தேட வைப்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கியுள்ளன.
சிங்கள எழுச்சியான தேசிய மக்கள் சக்திக்கு இது இலங்கையர் என்ற பிரித்தானிய காலனித்துவ செயற்கை தேசியத்தை தனது ஒரு நாடு ஒரு சட்ட அமுலாக்கத்துக்கு உரிய சமகாலத் தேசியமாக மறுமலர்ச்சி அடைய வைத்தல், காலத்தின் தேவையாக உள்ளது. இதனை ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்டல்ல வேற்றுமைக்குள் இறைமையை முன்னெடுக்கும் ஆற்றலாளர்கள் அனைவரையும் அவர்களின் மாறுபட்ட ஆற்றல்களை மதித்துப் பொதுவெளியில் ஓரே இலக்கான ஈழத்தமிழர் இறைமையை வெளிப்படுத்தி நிலைப்படுத்திப் பாதுகாக்க இணைப்பதன் மூலம் ஒருமைப்பாட்டை நிறுவி தன்னாட்சியை உறுதிப்படுத்த முயலுங்கள் என்றே இலக்கு அழைக்கிறது.
இருப்பது எதையும் இருப்பவர் யாரையும் அழிக்க முயற்சிக்காது உள்ளவை அனைத்தினதும் வலிமையை சிறியனவாயினும் பெரியனவாயினும் ஈழத்தமிழருக்கு உரியதாக மாற்ற முயலுங்கள்-அது முடியும். இதற்கு வெட்டிப் பேச்சுக்களை எழுத்துக்களை சமுகவலைத்தளங்கள் வழி வளர்த்து மேலும் மேலும் பிரிவினைகளை வளர்க்காது குறைகாணின் நேருக்கு நேர் பேசி நிறைவாக்குவோம். நிறை காணின் தோள் கொடுத்து அதை பயனாக்குவோம். இதுவே சமுகமாக ஈழத்தமிழ் தேச இனத்தை மடைமாற்றம் செய்ய முயலும் தேசிய மக்கள் சத்தியின் செயற்பாடுகளைத் தடுக்க ஈழத்தமிழர் தேசமாக எழ ஒரே வழி. 21ம் திகதி சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதி தனது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய உடனேயே அது ஈழத்தமிழர் இறைமையை ஏற்று அதன் அடிப்படையில் ஈழத்தமிழரின் வரலாற்றுத் தாயகமாகவும் இலங்கைத்தீவு உள்ளது என்ற உள்ளுணர்வுடன் இலங்கைத்தீவின் பொருளாதாரத்தைப் பாதுகாத்திட இரு தேச இனங்களும் பங்காற்ற அழைத்தால் வரவேற்போம். இல்லையேல் எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க நாமே ஒருவருக்கு ஒருவர் துணையாக வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணம்.

Tamil News