சிறிலங்கா ஈழத்தமிழரை இனவழிப்பு செய்வதற்குச் செய்த-செய்கிற அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான மனிதாயத்தைச் சிதைக்கும் அத்தனை செயற்பாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபை அதன் “இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் செயல்” எனக் கண்டும் காணமல் இருந்ததும் – இருப்பதும், இன்று அதுவே உலக அரசியலிலும் மக்களின் இறைமையையும் இருப்பையும் இனஅழிப்பால் இல்லாதொழிக்கும் அனைத்துலக பாதுகாப்புக்கும் அமைதிக்கும் தீங்கு விளைவிக்கும் அரசியல் முறைமையாகப் பரிணாமம் அடைந்து இஸ்ரேயலால் மீளவும் பலஸ்தீன மண்ணில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. உக்ரேன் ரஸ்ய யுத்தத்திலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இதன் உச்சமாக சிறிலங்காவுக்கு ஈழத்தமிழர்களின் வீட்டுக்குள் யுத்தத்தைக் கொண்டு வர எந்த இஸ்ரேலிய புலனாய்வு முகவர்கள் பயிற்சிகள் கொடுத்தார்களோ அதே இஸ்ரேயலிய புலனாய்வு முகவர்கள் தங்கள் எல்லை கடந்து லெபனானிலும் சிரியாவிலும் மக்கள் தொடர்புச்சாதனங்களான ‘பேஜர்களையும் வாக்கிடோக்கிகளையும்’ வெடிக்கச் செய்து மக்களின் வாழ்வாதாரக் கருவிகளையே அவர்களை இனப்படுகொலை செய்வதற்கான கருவியாக மாற்றியுள்ளமை இவ்வார உலக நிகழ்வாக உள்ளது.
இந்நேரத்தில் உலகின் ஒவ்வொரு போராடும் தேச இனங்களும் தங்கள் இறைமையையும் இருப்பையும் தாங்களே உறுதிப்படுத்துவதன் மூலமே தங்கள் மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய அனைத்துலகச் சூழ்நிலை தோன்றியுள்ளது. இந்த அனைத்துலக மாற்றத்தை ஈழத்தமிழர் உள்வாங்கியதன் நடைமுறைச் செயற்பாடே “பொதுவேட்பாளர்” மூலம் ஈழத்தமிழர்கள் இறைமையும் ஒருமைப்பாடும் உடைய தேசமக்கள் என்பதை உலகுக்கு மீளுறுதி செய்து ஈழத்தமிழர்களின் இறைமையயும் இருப்பையும் பாதுகாக்க முயலும் “நமக்கு நாமே வாக்களிக்கும்” உலகின் புதிய சனநாயகப் போராட்டம்.
இந்த பொதுவேட்பாளர் தேர்தல் வெற்றியை அல்ல இனத்தின் இருப்பை வாக்குப்பலத்தின் மூலம் சனநாயக வழியில் வெளிப்படுத்துவதையே மையமாகக் கொண்டது. ஈழத்தமிழினத்தின் வேட்பாளராக அல்ல சின்னமாகவே சங்குச் சின்னத்தில் தன்னைப் பொதுவேட்பாளராக ஈழத்தமிழினத்தின் சார்பாக வெளிப்படுத்தியுள்ள முன்னாள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்கள் பொலிகண்டி முதல் பொத்துவில் வரை ஈழத்தமிழர் தாயகம் எங்கும் கடந்த மாதம் 23 முதல் மூன்று கிழமைகள் சூறாவளிப் பயணம் செய்து ஈழத்தமிழர்களைத் தேசமாக எழுந்து செப்டெம்பர் 21 இல் உலகுக்கு முன் வாக்குகள் மூலம் 1977ம் ஆண்டின் சுயநிர்ணயத்தை மீளுறுதி செய்ய அழைத்துள்ளார்.
78ம் ஆண்டின் இலங்கை சோசலிச சனநாயகக் குடியரசு அரசிலமைப்பால் உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தல் ஈழத்தமிழர்களுக்கு உரியதல்ல. பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய சிங்களப் பெரும்பான்மை பாராளுமன்ற ஒற்றையாட்சியின் அடிப்படையிலான எந்தத் தீர்வும் ஈழத்தமிழர்களின் அரசியல் விருப்பு எதனையும் திருப்தி செய்யாது. தீர்க்கப்படாத காலனித்துவப் பிரச்சினையாகக் கடந்த 76 ஆண்டுகளாக உள்ள ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினை அனைத்துலகச் சட்டங்களால் ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய அனைத்துலகப் பிரச்சினை என்பதால் அனைத்துலகால் ஈழத்தமிழரின் இறைமயும் தன்னாட்சியும் ஏற்கப்பட்ட நிலையில்தான் எங்களுக்கான சனநாயகப் பங்களிப்பைச் செலுத்தி எங்களுடைய உள்ளக தன்னாட்சியின் அடிப்படையில் எமது தன்னாட்சியைப் பயன்படுத்தி வாழ முடியும் என்பதே பொதுவேட்பாளரின் தேர்தல் விளக்கத் திரட்டாக உள்ளது.
இந்த காலனித்துவத்தால் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்த இயலாத மக்களாக ஈழத்தமிழர் உள்ளனரென அவர்கள் தன்னாட்சி உரிமையினைப் பயன்படுத்தி வாழ்வதற்கான நிலை உருவாகும் வரை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டுமென யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள்தான் இவ்வாண்டின் தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரின் வேண்டுகோளைச் செயற்பாட்டுக்கு கொண்டுவரத் தக்க வகையில்தான் 1977 ம் ஆண்டு சிறிலங்காவின் தேசிய சபைக்கான பொதுத் தேர்தலை ஈழத்தமிழர்கள் தங்களின் தாயக தேசிய தன்னாட்சிப் பிரகடனமான 1976ம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான குடியொப்பமாக மாற்றியது போலவே சிறிலங்காவின் 9வது நிறைவேற்று அதிகாரமுள்ள அரசுத்தலைவர் தேர்தலை அந்த நோக்கை நிராகரித்து ஈழத்தமிழரின் இறைமையையும் தன்னாட்சி உரிமையையும் மீளுறுதி செய்யும் குடியொப்பமாக பொதுவேட்பாளர் போட்டியிடல் மாற்றியுள்ளது. ஆனால் மாண்பமை கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் 22.05. 1972 முதல் அரசற்ற தேசஇனமாகவுள்ள ஈழத்தமிழர் சிறிலங்காப் பாராளுமன்றத் தேர்தல்களைப் புறக்கணிக்கும் மரபுநிலைப் போராட்டத்தையே இன்று தனதுநிலைப்பாடாகவும் அறிவித்துள்ளார். இந்தத் தேர்தல் புறக்கணிப்புக்களின் பொழுது அளிக்கப்படாத வாக்குகள் இந்த அரசியல் கொள்கைக்காகத்தான் அளிக்கப்படாது விடப்பட்டது என்பது அரூபநிலையாக இருப்பதால் சான்றாதாரமாக அதனை ஏற்று அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களால் எதுவும் செய்ய இயலாதுள்ளது என்பது அனைத்துலக அமைப்புக்களின் நாடுகளின் தெளிவான பதிலாக உள்ளது. இதனால் ஈழத்தமிழரின் தேர்தல் புறக்கணிப்பை உருவநிலை வேட்பாளர் ஒருவரை இதுவே எமது கொள்கையென வாக்களிப்புக்கு நிறுத்தி சான்றாதாரப்படுத்த வேண்டிய சமகாலத் தேவையின் வெளிப்பாடே பொதுவேட்பாளர் போட்டியிட வேணடியதாகியுள்ளது. எனவே சங்குச் சின்னம் இன்று ஈழத்தமிழர்களின் சமகால அரசியல் நிலைப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தும் ஈழத்தமிழரின் குரலாக உள்ளது. பொதுவேட்பாளரின் பணி (Mission) என்ன என்பதும் அதன் காட்சிநிலை (Vision) என்பதும் ஈழத்தமிழரை இறைமையும் ஒருமைப்பாடும் உள்ள தனியான தேச இனம் என்று உலகுக்கும் சிங்களப் பெரும்பான்மையினர்க்கும் மீளுறுதி செய்து 1977ம் ஆண்டின் மக்களாணையை சனநாயக வழிகளில் நடைமுறைப்படுத்தல் என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. இனி மக்கள் இதற்கு வாக்குப் பலத்தால் கையொப்பப்பலம் அளித்தல் ( Signature) என்னும் அரசியல் நடவடிக்கையே 21.09.2024 இல் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெற வேண்டியுள்ளது. இது சிறிலங்காவின் நோக்கை நிறைவேற்ற வாக்களிக்கும் தேர்தல் அல்ல ஈழத்தமிழரின் நோக்கை வெளிப்படுத்த வாக்களிக்கும் தேர்தல். இதனைச் சரிவர உணர்ந்து ஈழத்தமிழர்கள் அனைவரும் தங்கள் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து “நாம் நமக்காக வாக்களிக்க” வேண்டிய வரலாற்றுக்கடமையைச் செய்ய இலக்கு அழைக்கிறது.
கத்தோலிக்க சமயத்தின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில் “வாக்களிக்காது விடுவது குற்றச் செயல். ஆனால் போட்டியிடும் கண்ணியத்துக்குரியவர் தனது குடிவரவுக் கொள்கைகளால் அகதிகள்- பிறநாட்டவர் – பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் என்பவற்றை இல்லாதொழிக்கும் கொலைகாரர்-போட்டியிடும் மதிப்புக்குரிய பெண் வேட்பாளரோ கருக்கொலைக்கு ஆதரவளிக்கும் அவரது கொள்கையால் கொலைகாரர். ஆகவே குறைந்த அளவிலான தீமையை உடையவர் யாரென அவர்களுக்கு வாக்களிப்பதே சிறந்தது” என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இது சமகாலத்தில் வாக்களியாத புறக்கணிப்புநிலை அனைத்துலக நிலையில் குற்றச் செயலாகவே கருதப்படுகிறது என்பதைத் தெளிவாக்கியுள்ளது. இதனால் புறக்கணிப்பின் நோக்கை எந்தவொரு நாடோ அமைப்போ கவனத்தில் எடுப்பதில்லை. இதனை ஈழத்தமிழரின் அவர்கள் அரசற்ற தேச இனமாக்கப்பட்ட 22.05. 1972 முதலாக இன்று வரையான தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களும் எந்த உரிய பலனையும் அளிக்காததும் நிரூபித்துள்ளது. அத்துடன் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் 100000 பேர் வாக்களித்தால் 50000 உம் 1 என்ற அடிப்படையில் ஜனாதிபதியாவதற்குரிய வாக்கு அமையும் ஆனால் புறக்கணிப்பால் 60000 பேர் வாக்களித்தால் 30000 உம் 1உம் என்று வெற்றிச் சந்தர்ப்பம் குறைந்த வாக்குகளுடனேயே அமைவதால் புறக்கணிப்புச் சிங்களக்கட்சிகளுக்குச் சாதகமாகவே முடியும் என்கின்ற எச்சரிப்பை விடுத்துள்ளார். இந்நிலையில் போட்டியிட்டு மக்கள் வாக்கைப் பெற்று எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொதுவேட்பாளர் எல்லாவிதத்திலும் காலத்தின் தேவையாகிறது.
எனவே சிறிலங்கா தனது பொருளாதார வங்குரோத்து நிலைக்கும் அரகலிய மக்கள் எழுச்சிக்கும் உரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்ல தேர்தல் என இந்த ஜனாதிபதி தேர்தலை முன்னிலைப்படுத்தியுள்ளதால் சிங்கள வேட்பாளர்களில் முன்னணியில் இருக்கும் நால்வரும் ஈழத்தமிழர்களைத் தங்கள் சிங்கள பௌத்த நாட்டில் வாழும் சமுகமாகவே உறுதிப்படுத்தி இனவாதம் பேசினால் இனப்பிரச்சினை உள்ளதாகிவிடும் என வாயால் பேசாது தங்கள் தேர்தல் அறிக்கைகளில் சிங்கள பௌத்த உயர் நிலையை உறுதிப்படுத்தி ஈழத்தமிழரின் இறைமை நீக்கத்தையும் ஈழத்தமிழ்த் தேசிய நீக்கத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர். ஆதலால் சிங்களவரிடை தேர்தல் பரப்புரையில் இனவாதம் குறைவடைந்துள்ளது என்ற கருத்து முற்றிலும் தவறானது. இந்நிலையில் பொதுவேட்பாளருக்குச் சங்குச் சின்னத்தில் வாக்களித்து ஈழத்தமிழரின் இறைமையையும் இருப்பையும் பாதுகாருங்கள் என்பதே இலக்கின் வேண்டுகோளாக உள்ளது. அதே வேளை பொதுவேட்பாளருக்கு ஈழத்தமிழர்களிடை பரப்புரை பல்வேறு காரணங்களால் ஆழமாக்கப்படாத நிலை மிகப்பெரிய வாக்குப்பலத்தை அளிக்காது விட்டாலும் இந்தத் தொடக்கம் இனிவரும் தேர்தல்களில் எல்லாம் ஈழத்தமிழர் பொதுவெளியில் ஒன்று பட்டு நின்று தங்கள் கொள்கைகளை கோட்பாடுகளை வெளிப்படுத்தும் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளது என்பது இலக்கின் பார்வையாக உள்ளது. ஆதலால் வெற்றி-வெற்றி என்ற நிலையில் என்றுமுள்ள பொதுவேட்பாளருக்கு மக்கள் சங்குச் சின்னத்தில் அளிக்கும் வாக்குப்பலம் ஈழத்தமிழர்களின் இறைமையின் மீளுறுதிப்பாட்டுக்கும் இருப்பின் அடையாள வெளிப்படுத்தலுக்கும் ஈழத்தமிழரை ஒரு தேசமாக எழ வைக்கும் என்பதில் இலக்குக்கு எள்ளவும் சந்தேகமில்லை. இறைமையுள்ள ஈழத்தமிழர்களுக்கு அதனை மீளுறுதி செய்ய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கொண்ட மக்கள் போராட்டங்கள் வெடிக்க வேண்டும் என்பதை தியாகி திலீபனின் 37வது நினைவேந்தல் வாரத்தில் இடம்பெறும் இந்த “நமக்காக நாமே வாக்களிக்கும் சனநாயகப் போராட்டம்” ஈழத்தமிழர்களுக்கு மீள்நினைவுறுத்தட்டும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்




