சிறிலங்காவின் வங்குரோத்துப் பொருளாதார நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு அனைத்துலக நாணய நிதியத்தின் பிணையெடுப்பு நிபந்தனைகளை அடுத்த ஐந்து வருடத்துக்குத் தொடர்ந்து செயற்படுத்துவதற்கான சிங்கள மக்களாணையைப் பெறும் சிறிலங்காவின் 9வது அரசுத்தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலைச் சிறிலங்காவின் அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இன்னும் சரியாக ஒருமாதத்தில் செப்டெம்பர் 21இல் நடாத்தவுள்ளார். அதே நேரத்தில் ஒரு கல்லில் இருமாங்காயாக ஈழத்தமிழர் தாயகத்தின் மீதான பொருளாதார யுத்தப் பிரகடனத்தை ஈழத்தமிழர்களின் தாயகத்தின் நில- கடல் – வான் பகுதிகளை இந்தியக் கூட்டாண்மையின் கீழும் மற்றைய நாடுகளின் பங்காண்மையின் கீழும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரும் செயற்பாட்டினை யாழ்ப்பாணத்தில் வைத்தே அறிவித்த சிறிலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஈழத்தமிழர்களின் வாக்கினாலேயே அப்பிரகடனத்தை அங்கீகரிக்கச் செய்யும் நரித்தந்திர அரசியலையும் செய்ய முற்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தேசமாக எழுந்து இந்த அரசுத்தலைவர் தேர்தலையும் அதன் நோக்குகளையும் நாம் அனுமதிக்கமாட்டோமெனத் தங்களின் தாயகத்தின் மீதான பொருளாதார யுத்தத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான சனநாயகப் போராட்டத்தைத் தமக்கான “பொதுவேட்பாளர்” ஒருவரைத் தேர்தலில் நிறுத்தித் தொடங்கியுள்ளனர். எனவே இப்பொழுது ஈழத்தமிழர் தாயகம் “அவசர நிலைக்கு” உள்ளாகியுள்ளது. இந்நேரத்தில் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பொதுவேட்பாளருக்குப் பதிவு செய்வதன் மூலம் தாயகம் மீதான சிறிலங்காவின் பொருளாதாரயுத்தத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான ஈழத்தமிழர்களின் மக்கள்பலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இலக்கின் உடனடியானதும் முக்கியமானதுமான வேண்டுகோளாக உள்ளது.
அடுத்து ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 90களை அடுத்து ஈழத்தமிழர்கள் தங்களின் போராட்ட முறைமையை “டிஜிட்டல் போராக” மாற்றியமையே சிறிலங்காவின் மிக மோசமான இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்புகளுக்கு மத்தியிலும் முப்பதொரு ஆண்டுகள் தங்களுடைய உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாத்து அமைதியான வளர்ச்சிகளுடன் கூடிய நடைமுறையரசை நிலைப்படுத்த உதவியது என்பது வரலாறு. ஆயினும் இந்த “டிஜிட்டல் தரவு” பரிமாற்றத்தினைச் சிறிலங்கா அரசாங்கமும் அதன் ஆதரவு பிராந்திய மற்றும் உலக வல்லாண்மைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு உத்திகளால் தடுத்து நிறுத்தியே 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு என்னும் 21ம் நூற்றாண்டின் கிட்லரிசத்தையும் மிஞ்சிய ராசபக்சத்தினால் 176000 ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனப்படுகொலை செய்தனர். அத்துடன் பல்வேறு இன்றைய இஸ்ரேலிய மனித வதைகளை விட மோசமான மனித வதைகளால் ஈழத்தமிழர்க்கு இனங்காணக் கூடிய அச்சத்தையே வாழ்வாக்கி அவர்களின் அரசியல் பணிவைக் கடந்த 15 ஆண்டுகளாகப் படைபலம் கொண்டு பெற்று அதனை சனநாயக ஆட்சியாக உலகில் தமது ஆதரவு நாடுகளைக் கொண்டு நிலைநிறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஒன்று மீளவும் சமகாலத்தில் உள்ளக தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட நிலையில் திறந்த சிறையில் வாழும் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியலின்உண்மைகளை உலகின் பார்வைக்கு கொண்டு வருதல். மற்றையது, வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை இலங்கைத் தீவில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் உடைய தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளின் தன்மைகளையும் தேவைகளையும் உலகுக்கு வெளிப்படுத்தல். இவ்விரண்டுக்கும் மீளவும் “டிஜிட்டல் போரை” அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாக உண்மையுடனும் நேர்மையுடனும் திரிபுவாதங்கள் பொய்மைகளின்றியும் முன்னெடுப்பதற்கு இந்த பொதுவேட்பாளர் தேர்தல் மேடையைப் பயன்படுத்த வேண்டும். வரலாறு, மானிடவியல் தொல்லியல் சமுகவியல் அரசியல் விஞ்ஞான பொருளாதார சட்ட, அளைத்துலகச் சட்ட, அனைத்துலகக் கற்கைகள் ராஜதந்திரக் கற்கைகள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் ஆய்வாளர்கள் சிந்தனையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சமுகக் கொள்கைகளையும் ஈழத்தமிழர்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் சுருக்கமாகத் தெளிவாக வெளிப்படுத்த உழைக்க வேண்டிய நேரமிது என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
வாக்கு என்பது சனநாயகத்தையும் விடுதலையையும் உறுதிப்படுத்தும் மிக எளிமையான ஆனால் மிக்கசத்தி படைத்த ஆயுதம். ஆயினும் பெரும்பான்மையினர் ஆட்சி நடைபெறும் கட்டமைப்புக்களில் அவ்வாக்கு மக்களின் பிரதிநிதித்துவமாக சட்டவாக்க நிர்வாக சட்ட அமுலாக்க வலுவேறுபாட்டுடன் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்ட ஆட்சியாக அமைவதில்லை. இதனால் வாக்கு என்பது அனைத்துலக மக்களுக்கும் அனைத்துலக நாடுகளுக்கும் அனைத்துலக அமைப்புக்களுக்கும் பாதிப்புற்ற மக்கள் தங்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் உறுதி செய்யுங்கள் என்பதை மக்களாணையாக வெளிப்படுத்தத்தான் உதவும். 1977 இலேயே ஈழத்தமிழர்களின் அரசியல் கொள்கையாகக் கோட்பாடாகத் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவுசெய்யும் தங்களின் பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தனியாட்சியே தங்களுக்குப் பாதுகாப்பான வாழ்வையும் வளர்ச்சிகளையும் தருமென ஈழத்தமிழர்கள் தன்னாட்சியை வெளிப்படுத்தி 1978 முதல் நடைமுறையரசாக நிறுவி 31 ஆண்டுகள் அதில் பாதுகாப்பான அமைதியான வளர்ச்சிகளுடன் வாழ முற்பட்ட போது ஒவ்வொரு முறையும் சிறிலங்கா ஆயுதப்படை மூலமும் அரசபயங்கரவாதத்தின் மூலமும் அதனைத் தடுத்து வந்தனர் என்பது வரலாறு.
இந்நிலையில் பிரித்தானியக் காலனித்துவத்தால் உருவாக்கப்பட்டுத் தீர்க்கப்படாத காலனித்துவப் பிரச்சினையாகவுள்ள தங்களின் இறைமையை மீளுறுதி செய்தல் என்ற ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையின் ஆள்நிலைக் குறியீடாகவே பொதுவேட்பாளர் இன்று கட்டமைக்கப்பட்டுள்ளார்.
ஆயினும் சிறிலங்காவின் அரசியலமைப்பின் 6ம் திருத்தம் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன ஈழத்தமிழர்களின் கருத்துச்சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுநத்திரம் ஒன்று கூடும் சுதந்திரம் உட்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மறுத்துள்ளதால் தப்பி வாழும் பொறிமுறைக்குள்ளே உங்களின் சுயநிர்ணய உரிமைக்கு நீங்களே வாக்களிப்பது இப்பொதுவேட்பாளர் என்ற உறுதியான செய்தி மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இப்பொதுவேட்பாளர் ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமைக்கான குறியீடாக உள்ளதால் இதில் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் ஈழத்தமிழர்கள் தேசமாக எழுவதையே விரும்புகின்றோம் என்பதையே எவ்வளவு வாக்கு கிடைத்தாலும் அவ்வளவு வாக்கும் உலகுக்குச் சொல்லும் என்பதே உண்மை. அது ஆறு இலட்சத்துக்கு அதிகமானால் அதுவே பெரும்பலமாகும் என்பதை உணர்ந்து வாக்குப்பலத்தால் ஈழத்தமிழர் தாயகத்தின் மீதான ரணிலின் பொருளாதார யுத்தப் பிரகடனத்தைத் தடுத்து நிறுத்த நாம் ஒன்றுபட்டெழ வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
Home ஆசிரியர் தலையங்கம் பொருளாதார யுத்தப் பிரகடனத்திலிருந்து ஈழத்தமிழர் தாயக இறைமையைக் காக்க பொதுவேட்பாளர்க்கு வாக்களிக்குக – ஆசிரியர் தலையங்கம்