ஈழத்தமிழர் இறைமை தேர்தல் மேடையில் மீளுறுதி செய்யப்படுமளவுக்கே பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தமிழ்த்தேசியத்தின் சின்னமாவார் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 299

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்னும் பெயரில் 7 ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளும் 7 குடிசார் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னாள் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களை அறிவித்துள்ளனர். இது 1976க்குப் பின் கட்சி அரசியலில் மீளவும் கூட்டணி அரசியலை மீள் கட்டமைத்துள்ளது.இதனை உறுதி செய்யக் கூடிய விதமாக தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவுள்ள முன்னாள் மட்டக்களப்பு இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அளித்த உரையும் அமைகிறது. முதலில் அவ்வுரையைச் சுருக்கமாக எடுத்து நோக்குவோம். “தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மட்டுமே நான் இருப்பேன். இலங்கை சோசலிசக் குடியரசின் தலைவராக வருவதற்காக நான் போட்டியிடவில்லை. தமிழ்த்தேசிய மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாக நாங்கள் இருக்கின்றோம். எங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டுமென்பதற்காக அனைத்துலகத்திற்கும் தென்னிலங்கைக்கும் வலியுறுத்துகின்ற அடையாளமாக நான் இந்தத் தேர்தலில் பொதுவேட்பாளராக நான் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். எனது பணி செப்டெம்பர் 22ம் திகதி வரை மட்டுமே இருக்கும். அதற்குப் பிற்பாடான பணிகளைத் தமிழ் பொதுக்கட்டமைப்பே எடுக்கும்” என்னும் அவரின் உரையின் முக்கிய பகுதி ஈழத்தமிழர் கட்சி அரசியலில் ஏற்பட்டிருந்த தேக்க நிலையைக் கட்டுடைப்பதற்கான அறைகூவலாக அமைகிறது.
அடுத்து “அனைத்துலக ரீதியில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்கின்ற பொழுது அனைத்துலகம் ஒருமித்த குரலில் வரவேண்டும் என்றுதான் நமக்குக் கூறியது. நடைபெறவுள்ள இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் ஒருகுரலில் ஒருமித்த கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்காக தமிழ் பொதுவேட்பாளர் அடையாளப்படுத்தப்பட்டு அவருக்கு ஆதரவை மக்கள் வாக்குகளாகச் செலுத்துகின்ற பொழுது தமிழ் மக்களின் இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதுள்ளது அவை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்ற முயற்சியே இந்தப் பொதுவேட்பாளர் முயற்சி” என்னும் அவரின் விளக்கம் அனைத்துலக நிலையில் உள்ள தேக்கத்துக்கான எதிர்வினையாகவும் உள்ளது. ஆனால் அவர் “பொதுக்கட்டமைப்பு சார்பில் பலரையும் ஆராய்ந்த பின்னர் இறுதியாகச் சட்டத்தரணி தவராசவின் பெயரும் எனது பெயரும் இறுதித் தெரிவில் இருந்தது. நாங்கள் இருவரம் நண்பர்களாகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நானோ அவரோ எவ்விதமான சர்ச்சைகளுமில்லாமல் என்னை தெரிவு செய்தார்கள். இதனால் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன்” என்கின்ற பொழுது; தமிழ்த்தேசியம் என்பது குறித்த விளக்கம் அதன் வரலாற்று வளர்ச்சி தெளிவாக்கப்படாத நிலை உண்டு என்பதை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
“இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் எத்தகையவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். விடுதலைப்புலிகளை நான்தான் பிரித்தேன். கட்சிகளைப் பிரித்தேன். என்னை மாற்றமாட்டேன் என்றெல்லாம் போட்டியிட்டுபவர்களே அவர்கள். இவ்வாறான நிலையில் மக்களைப் பிரித்தாள்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று கதைப்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப் போகின்றோமா? வடக்கு கிழக்கைப் பிரித்தவர்களுக்கு வாக்குகளை வழங்கப் போகின்றோமா? என்பதைத் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசிய இனத்தின் விடிவுக்காக பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ள நாம் உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையில் பல அரசுத்தலைவர்களைக் கண்டு ஏமாற்றமடைந்த நிலையில் இன்னும் பேரம்பேசத்தான் போகின்றோமா? இவை தொடர்பில் சிந்திக்க வேண்டும். இவற்றுக்காகத்தான் பொதுவேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். எனவே ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் எங்கள் விடிவுக்காக வாக்களிக்க வேண்டும்” என இவர் வாக்களிப்புக்கான காரணத்தைக் கட்டமைக்கையில் இனஅழிப்பு குறித்து எதுவுமே பேசாத நிலையில் இவர் தமிழ் தேசியத்தின் சின்னமாக எவ்வாறு தன்னை வெளிப்படுத்துவார் என்கிற சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்பட வைக்கிறது என்பது இலக்கின் கருத்து. இந்நிலையில் இந்த உரையினை அவர் 1979 முதல் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கும் சிறிலங்கா அரசியலமைப்பின் 1983ம் ஆண்டு ஆறாவது திருத்தத்திற்கும் கட்டுப்பட்ட நிலையிலேயே ஆற்ற வேண்டிய நடைமுறை எதார்த்தம் உள்ளதால் இது குறித்த திறனாய்வுக்குள் இலக்கு மேலும் செல்லாது. இந்த முயற்சியை இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் மேடையைப் பயன்படுத்தி ஈழத்தமிழர் இறைமையை எவ்வாறு ஈழத்தமிழர் தாயகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மீளுறுதி செய்யலாம் என்பதை எடுத்து நோக்கலாமெனக் கருதுகிறது.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்தப் பொதுவேட்பாளரின் நோக்கு என்ன அது எந்த வகையில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கு அவர்களின் ஆதரவையும் ஓத்துழைப்பையும் நாடி நிற்கிறது என்பதைத் தெளிவாக்க வேண்டும் என்பது இலக்கின் முதல் கருத்தாக உள்ளது. இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி இழக்கப்பட்டுள்ளதைச் சான்றாதாரங்களுடன் எடுத்து விளக்கி இதனை ஈடுசெய்யாது ஈழத்தமிழர்களின் மேலான இனஅழிப்பை நடாத்த மக்கள் மேலான போரை முன்னெடுத்தே முழு இலங்கையரையும் வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்துள்ளன சிங்களக் கட்சிகள் என்பதைத் தெளிவாக்க வேண்டும். ஈழத்தமிழரின் இறைமையின் மீளுறுதி என்பது இலங்கையின் வேறெந்த இனத்துக்கும் எந்த வகையிலும் எந்த இழப்புக்களையும் ஏற்படுத்தாது என்பதையும் மாறாக எல்லா இனங்களுக்குமான எல்லா வளர்ச்சிகளுக்கும் உதவும் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தல் முக்கியம் என்பது இலக்கின் நிலைப்பாடாக உள்ளது.
இந்தப் பொதுவேட்பாளர் என்பது அனைத்துலகத் தூதுவர்கள் ஈழத்தமிழர் சனநாயக வழிகளில் பங்கெடுக்க மறுப்பதினாலேயே தங்களால் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைகளில் உரிய உதவிகளைச் செய்ய இயலாதிருக்கிறது எனக் கூறிவருவதற்கு எதிர்வினையாக அமைகிறது. எனவே ஒவ்வொரு தூதரகங்களுடனும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு தொடர்பு கொண்டு தங்களின் இந்த முடிவுக்கான தேவையை எடுத்து விளக்குவது முக்கியம். அனைத்துலக நாடுகளைப் பொறுத்த மட்டில் புலம்பெயர் தமிழர்கள் ஊடகங்கள் வழியாகவும் தங்கள் தங்கள் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களிடமும் ஈழத்தமிழர்கள் சனநாயக அரசியலில் பங்கெடுக்காத நிலையில் தவிப்பதற்கான காரணங்களைத் தெளிவாக்க வேண்டும். உலகின் அத்தனை நாடுகளின் தூதுவர்களுக்கும் அனைத்துலக ஆதரவினாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்யலாம் என்ற உண்மை உணர்த்தப்படல் முக்கியம் என்பது இலக்கின் தலையாய எண்ணம். இறுதியாக இந்தியாவின் கூட்டாண்மை, அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் பங்காண்மை, சீனாவின் நட்பாண்மை, ரஸ்யா மற்றும் யப்பான் உட்பட அனைத்துநாடுகளுடனுமான பல்வேறு செயலாண்மைகள் இவற்றின் மூலமே இன்று சிறிலங்கா அரசாங்கம் தன் இறைமையை நிலைப்படுத்துவதால் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பு பொதுவேட்பாளரை மையப்படுத்தி அனைத்து நாடுகளுடனும் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு உலக அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அறிவியல் தொழில்நுட்ப எழுச்சிக்கும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை துறைசார் நிபுணர்களின் ஓத்துழைப்புடன் வெளிப்படுத்தினாலே ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் பெற முடியும். இவற்றைச் சரி வரச் சரியான நேரத்தில் செய்யும் திறனே ஈழத்தமிழர்களைத் தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பை தமிழ்த்தேசியத்தின் சின்னமாகக் கருதி வாக்களிக்க வைக்குமென்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.

Tamil News