இறைமையை இல்லாதொழிக்க மனிதரை இல்லாதொழிக்கும் சிறிலங்கா – இஸ்ரேயல் அரசியல் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 260

இறைமையை இல்லாதொழிக்க மனிதரை இல்லாதொழிக்கும்
சிறிலங்கா – இஸ்ரேயல் அரசியல்
| Weekly ePaper 260

காசாவிலிருந்து கிடைக்கும் தகவல்களும் தரவுகளும் அங்கு இஸ்ரேயலின் மனிதப்படுகொலையில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட தரவுகளையும் அதில் கிட்டத்தட்ட அரைவாசிபேர் சிறுவர்கள் என்ற வேதனைமிகு தகவல்களையும் ஒவ்வொரு பத்துநிமிடங்களுக்கும் ஒரு சிறுவர் என்ற வீதத்தில் பலஸ்தீனிய மக்கள் இனமே இனப்படுகொலையால் கொன்றழிக்கப்படுகின்றது என்ற நடைமுறை உண்மையையும் உலகுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் உறுதிப்படுத்துகின்றன. இது தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் இஸ்ரேயல் திட்டமிட்ட பலஸ்தீனிய மக்கள் இனஅழிப்பை மேற்கொள்கின்றார்கள் என்ற விழிப்புணர்வை உலக மக்களிடையிலும் உலக நாடுகளிடையிலும் வளரச்செய்து வருகிறது. இது ஒரு தேசஇனத்தின் மக்கள் இறைமையை இல்லாதொழிக்க அந்த மக்கள் இனத்து மனிதரையே இல்லாதொழித்தல் என்ற அரசியல் தத்துவமாகவே இன்று இஸ்ரேயலால் பலஸ்தீனியர்கள் மேலும், 2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பில் சிறிலங்காவால் ஈழத்தமிழ் மக்கள் மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை உலகு அறியும்.
இனஅழிப்பை செய்யும் ஆட்சியாரளர்கள் தங்கள் நாட்டின் இறைமையையும் ஒருமைப் பாட்டையும் பாதுகாக்கும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என நியாயப்படுத்தும் உத்தியாகவே இது தொடர்கிறது. இதனை இந்தப்பிரச்சினையை பலஸ்தீனிய மக்களுக்கும் ஈழமக்களுக்கும் உருவாக்கிய பிரித்தானியா உட்பட இதனை இன்று வரை வளர்த்து எரிகின்ற நெருப்பில் குளிர்காய்கின்ற அமெரிக்கா மற்றும் இந்த மேற்குலகநாடுகளின் அணிகள் இனஅழிப்பாளர்களான இஸ்ரேலிய – சிறிலங்கா அரசாங்கங்களுக்கு எப்பொழுதும் பேராதரவு அளிப்பதுவே இன்றைய அறிவியல் எழுச்சி பெற்ற உலகிலும் இனஅழிப்பும் மனிதப்படுகொலைகளும் நாளாந்த அரசியலாகத் தொடர்வதற்கான காரணங்களாக உள்ளன. இதனாலேயே, சிறிலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கொழும்பில் தனியார் விழாவொன்றில் உரையாற்றுகையில் இஸ்ரேலியர்கள் கமாஸ் பயங்கரவாதிகளை இல்லாதொழிப்பதற்கு அது தேசிய பாதுகாப்பென்று இஸ்ரேயலுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் அமெரிக்கா, நாங்களும் இதே செயலைச் செய்தமைக்கு எங்களை ஏன் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணையகத்தில் குற்றப்படுத்துகிறது? என எதிர்க்கேள்வி எழுப்பியதும் அல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை தங்களின் செயலை ஏற்றுத் தங்களுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே அதன் கேள்விகளுக்குப் பதில் எதிர்காலத்தில் சிறிலங்கா அளிக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கே முன்நிபந்தனையும் அந்தக் கூட்டத்தில் விதித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்காவின் இந்தக் கூற்றுக்கு சமூகவலைத் தளத்தில் பதிலிட்ட ஒருவர் இந்தக் கூற்றால் ரணில் சிறிலங்கா இனஅழிப்பு செய்தமையை ஏற்று அவரே வெளிப்படுத்திய ஒன்றாக அமைகிறது எனக் கூறியுள்ளமை முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
மேலும், இஸ்ரேலியர்களுக்கு யெருசலேம் பலஸ்தீனிய பகுதிகள் அவர்களின் தொன்மைத் தாயகமாக இருந்தாலும் வரலாற்றின் பரிணாமத்தில் அதனை அவர்கள் இழந்து 985 ஆண்டுகள் ஒரு இஸ்ரேலியர் கூட அந்தப் பகுதிகளில் வாழாத நிலையில், பின்னர் 1945இல் யூதரான அயன்ஸ்டின் அணுக்குண்டு தயாரிப்புக்கான பொறிமுறையினைக் கண்டறிந்த யூதர்களின் அறிவியல் எழுச்சியின் பின்னணியிலும், உலகெங்கும் அரசியல் புகலிடம் பெற்று வாழ்ந்த யூதர்களின் சமூக முதலீடுகளின் பலத்தினாலும் யேர்மனியரான ஹிட்லர் நடாத்திய யூத இனப்படுகொலைகளின் தாக்கத்தால் உலகில் யூதர்களுக்கான அனுதாப அலை உச்சமானதாலும், பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்த பலஸ்தீனியத்தில் யூதர்களை பலஸ்தீனிய மக்களுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாது, தாங்கள் கொண்டு வந்து குடியமர்த்தினதுமல்லாமல், இஸ்ரேலிய அரசுக்குள் அடக்கப்பட்ட மக்களாகப் பலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த தாயகத்திலேயே மாற்றியதால் அவர்கள் நில இழப்பும் தேசிய வாழ்வு மறுப்பும் தன்னாட்சி உரிமைப் பறிப்பும் அடைந்து இஸ்ரேலியர்களால் அவர்களின் இறைமையை அழிக்க அவர்களையே அழிக்கும் நாளாந்த வாழ்வில் அல்லலுற வைத்துள்ளார்கள்.
ஆனால் இலங்கைத் தீவில் இரு தேசமக்களாகத் தனித்துவமான அரசுக்களுடன் விளங்கிய தமிழ், சிங்கள மக்களை 1833இல் ஒருநாடாக கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்தத்தின் வழி மக்களது விருப்பின்றி இணைத்து, இலங்கைத் தேசியம் இலங்கை அரசாங்கம் என்ற கட்டமைப்புக்களைச் செயற்கையாக உருவாக்கிய பிரித்தானியா, 115 ஆண்டுகள் தமிழர்களின் இறைமையையும் சிங்களவர்களின் இறைமையையும் தங்கள் ஆட்சியில் வைத்திருந்து, 1948 இல் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுப்பதாக சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்ற ஒற்றையாட்சி முறை அரசாங்கம் ஒன்றுக்குள் தமிழர்களின் இறைமையையும் பகிர்ந்து இன்றைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை உருவாக்கியது. இது முற்றிலும் பலஸ்தீனிய மக்களின் தேசியப் பிரச்சினையில் இருந்து மாறுபட்ட வேறுபட்ட ஒன்று. எனவே அங்கு முயற்சிக்கப்படும் ஒருநாட்டுக்குள் இருதேசங்கள் என்ற தீர்வு கூட ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக மாட்டாது. அவ்வாறே கூட்டாட்சி முறைமைகளோ ஒன்றிய ஆட்சி முறைமைகளோ அல்லது ஒற்றையாட்சிக்குள் கண்ணியமான வாழ்வு என்ற இந்திய முறைமையோ ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக மாட்டாது. ஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் 1948 முதலான சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்ற ஆட்சியாளர்கள் 1978 முதல் 2009க்கு இடைப்பட்ட காலம் தவிர்ந்த இன்றுவரையான முழுக்காலத்திலும் பாராளுமன்றக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களாகத் தங்கள் ஆட்சியை முன்னெடுத்து ஈழத்தமிழர்களின் இறைமையை அழிக்க ஈழத்தமிழர்களின் இருப்பை அழிக்கும் இனஅழிப்பையே தங்கள் ஆட்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி சிறிலங்காவால் இழக்கவைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வெளியக தன்னாட்சியின் அடிப்படையில் அவர்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் தன்னாட்சி உரிமையை உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் அங்கீகரிப்பது ஒன்று மட்டுமே ஈழத்தமிழர்களைச் சிறிலங்காவின் இனஅழிப்பில் இருந்து பாதுகாத்து அவர்களின் அமைதி வாழ்வை உறுதிப்படுத்தும் என்பதே இலக்கின் இறுதியானதும் உறுதியானதுமான ஈழத்தமிழ் மக்களின் அனுபவங்களின் அடிப்படையிலான வரலாற்று உணர்விலான கருத்தாக உள்ளது. இதனால் ஈழத்மிழர் தேசிய விடுதலைப் போராட்டம் என்னும் அவர்களின் மண்ணையும் மக்களையும் காக்கும் போராட்டம் நியாயமானது பயங்கரவாதமல்ல. அவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையுடனும் தொடர்ச்சியுடனும் உள்ள தங்களின் இறைமையை, வாழ்வுக்கான அரசாக மீள்உற்பத்தி செய்வது அவர்களின் வாழ்வின் மீட்பேயன்றிப் பிரிவினைவாதம் அல்ல. இன்று மட்டுமல்ல சிறிலங்கா ஈழத்தமிழர்களின் மேலான இனஅழிப்பை தொடங்கிய நாள் முதலாக அதுவும் அதனது நட்பு நாடுகளும் தங்கள் உடன்பிறப்புகளின் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் இல்லாதொழிப்பதை தடுத்து நிறுத்த மனிதாயத்தால் தங்கள் உயிரையே அர்ப்பணித்து தேசிய வீரர்களாகப் போற்றப்படுபவர்களுக்கு மாவீரர் தீபமேற்றி வீரவணக்கம் செலுத்தி அவர்களின் தடங்களை மண்ணையும் மக்களையும் மீட்கவேண்டுமென்ற உயர் இலட்சியத்தைத் தாங்களும் தொடருவோம் எனத் தங்கள் உறுதி மொழியை ஈழத்தமிழர்கள் புதுப்பிக்கும் தேசிய நாள்தான் கார்த்திகை 27 மாவீரர் நாள். இந்நாளில் புதுப்பிக்கும் உறுதிமொழிக்கு உண்மையுள்ளவர்களாகத் தங்கள் வாழ்வை ஒவ்வொரு ஈழத்தமிழரும் தாயகத்திலும் உலகெங்கும் அமைத்துக் கொண்டால் ஈழத்தமிழரின் இறைமையை இல்லாதொழிக்க ஈழத்தமிழரையே இல்லாதொழிக்கும் சிறிலங்காவின் இனஅழிப்பு ஆட்சியில் இருந்து ஈழத்தமிழர்களை விடுவிப்பது பெரிய விடயமல்ல என்பதை இலக்கு இம்மாவீரர் மாதத்தில் நினைவூட்ட விரும்புகிறது. அதே வேளை பலஸ்தீனிய மக்களுக்கான தன்னாட்சியை உலகு ஏற்று அவர்கள் மேலான இஸ்ரேயலின் இனஅழிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றும் இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.

Tamil News